கோடை தொடங்கும் முன்பே கொளுத்தும் வெயில்… அடுத்த இரு தினங்களுக்கு 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் 2026 மார்ச் 27 முதல் 30 வரை வெப்பம் படிப்படியாக 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதால், இயல்பை விட கூடுதல் வெப்பம் நிலவும். சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என்பதால் ஓரளவு வெப்பமான சூழல் நிலவும்.

வெயில்
கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி வறண்ட வானிலையே நிலவியது. வெப்பநிலையைப் பொறுத்தவரை, மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை. இருப்பினும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து இரண்டு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, கரூர் பரமத்தியில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக முப்பத்தி ஒன்பது புள்ளி பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் தருமபுரியில் குறைந்தபட்சமாக இருபத்தி ஒன்று புள்ளி இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மலைப்பகுதியான கொடைக்கானலில் மிகக் குறைவாக ஒன்பது புள்ளி ஆறு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை
வரும் மார்ச் இருபத்தி ஆறு மற்றும் இருபத்தி ஏழு ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். மார்ச் இருபத்தி எட்டாம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மார்ச் இருபத்தி ஒன்பதாம் தேதி இதே பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் முப்பதாம் தேதியும் மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முப்பத்தி ஒன்று மற்றும் ஏப்ரல் ஒன்றாம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
வெப்பநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, மார்ச் இருபத்தி ஆறாம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும், மார்ச் இருபத்தி ஏழு முதல் மார்ச் முப்பது வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். இந்த காலக்கட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பிலிருந்து இரண்டு டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மார்ச் இருபத்தி ஆறாம் தேதி அதிகபட்ச வெப்பநிலை முப்பத்தி மூன்று முதல் முப்பத்தி நான்கு டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை இருபத்தி ஐந்து டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும். மார்ச் இருபத்தி ஏழாம் தேதி அதிகபட்ச வெப்பநிலை முப்பத்தி நான்கு முதல் முப்பத்தி ஐந்து டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை இருபத்தி ஐந்து முதல் இருபத்தி ஆறு டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்க வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மார்ச் இருபத்தி ஆறு முதல் மார்ச் முப்பது வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. கடல் சீற்றம் குறித்த எந்தவொரு அபாயமும் இல்லாததால் மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்குச் செல்லலாம் என விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை அவர்கள் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.