பொதுமக்களுக்கு எச்சரிக்கை: 40 டிகிரி செல்சியஸைத் தொடும் வெப்பம்… பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கரூர் பரமத்தியில் 41.2°C வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், வரும் நாட்களில் உள் மாவட்டங்களில் வெயில் மேலும் அதிகரிக்கக்கூடும்.

கோப்புப் புகைப்படம்
தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக வரும் நாட்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 2026 ஏப்ரல் 21 வரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் டெல்டா கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 2026 ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. உள் தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பை விட 3° செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பநிலை 37° செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். அதிக ஈரப்பதம் காரணமாக கடலோர மாவட்டங்களில் புழுக்கம் மற்றும் உடல் அசௌகரியம் ஏற்படலாம்.
தமிழகத்தின் தற்போதைய மழை மற்றும் வெப்ப நிலை
தமிழகத்தின் கடந்த 24 மணி நேர வானிலை நிலவரப்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிஞ்சுவாடி பகுதியில் அதிகபட்சமாக 8.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ள நிலையில், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. வெப்பநிலையை பொறுத்தவரை, கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 41.2° செல்சியஸ் பதிவாகி மக்களை வாட்டியெடுத்தது. சமவெளிப் பகுதிகளில் தர்மபுரியிலும் (25.0°C), மலைப்பகுதிகளில் கொடைக்கானலிலும் (13.5°C) குறைந்தபட்ச வெப்பநிலை நிலவியது.
வளிமண்டல சுழற்சியால் வரவிருக்கும் மழை வாய்ப்புகள்
தற்போது நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதையானது, சுமார் 0.9 கி.மீ உயரத்தில் மரத்வாடா முதல் மன்னார் வளைகுடா வரை நீடிக்கிறது. இதன் விளைவாக, வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், இராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மழையின் பரவல் சற்று அதிகரித்து, தெற்கு கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாட்டி வதைக்கும் வெயிலும் ஈரப்பத அசௌகரியமும்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படும். குறிப்பாக, ஏப்ரல் 21 வரை அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் ஒரே நேரத்தில் நிலவக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி மக்களிடையே ஒருவிதமான உடல் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை எட்டும் என்பதால் வெயிலின் தாக்கம் உணரப்படும்.