குறையும் வெயில்.. அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2025 மே 7ஆம் தேதியான இன்று வானம் மேகமூட்டத்துடன இருக்கும் எனவும் நகரில் ஒருசில இடத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை, மே 07 : தமிழகத்தில் வெப்பநிலை குறைந்து, பல்வேறு மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 மே 6ஆம் தேதி இரவு சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. 2025 மார்ச் மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. ஆனால், அவ்வப்போதும் பல்வேறு மாவட்டங்களில் மழையும் பெய்தது. சென்னை மற்றும் புறநகரிலும் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு, வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.
அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை
2025 மே 6ஆம் தேதியான நேற்று கூட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்தநிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.
அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 மே 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
சென்னையை பொறுத்தவரை, 2025 மே 7ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநைல 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, 2026 மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழகக்ததில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழை அந்தமானில் 2025 மே1 3ஆம் தேதி துவங்குவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எப்போதும், மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், 2025ல் முன்கூட்டியே துவங்குகிறது. இதனால், ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குவதல், வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இப்போதே, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கினால் வெயிலின் குறைந்து மழை பெய்யலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் குறைவான மழை பொழிவை கொடுக்கும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.