Rohit Sharma Retirement: அதிர்ச்சியிலும் அதிர்ச்சி! டெஸ்ட் போட்டியில் ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா.. அடுத்த கேப்டன் யார்?
IND vs ENG Test Series 2025: ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2025 ஜூன் தொடங்கும் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சொதப்பலான ஆட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ புதிய டெஸ்ட் கேப்டனை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா, கேஎல் ராகுல், கில், பண்ட் ஆகியோர் போட்டியிடலாம்.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசன் முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இது 2025-27 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனுக்கான முதல் டெஸ்ட் தொடர் போட்டியாகும். இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து டெஸ்ட் தொடர் (IND vs ENG Test Series 2025) ஜூன் 20 முதல் தொடங்க உள்ளது. இந்தநிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் சர்மா (Rohit Sharma) தனது ஓய்வை இன்ஸ்டாகிராம் ஸ்ரோரியில் பகிர்ந்து கொண்டு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். மேலும், ரோஹித் சர்மா தனது பதிவில் ரசிகர்களின் அன்புக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
அடுத்த கேப்டன் யார்..?
ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் டெஸ்ட் கேப்டன் விரைவில் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா பெயர் முதலிடத்தில் உள்ளது. இதேநேரத்தில் கே.எல்.ராகுல், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது. இதுகுறித்து பிசிசிஐ விரைவில் பெயரை அறிவிக்கும்.
டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய ரோஹித் சர்மா:
the day we dreaded is here. #RohitSharma𓃵 retires from Test Cricket . Thank you, Hitman, for the memories, the masterclasses, and the magic in whites. You’ll always be our Test captain at heart pic.twitter.com/aKObSJzvAw
— Aamir Khan (@AAMIRSRK45) May 7, 2025
2024-25 சீசனில் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் விலகி பெஞ்சில் அமர்ந்தார். கடந்த 15 டெஸ்ட் போட்டிகளில் 10.83 என்ற சராசரியில் வெறும் 164 ரன்கள் மட்டுமே எடுத்தார். வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி இந்திய மண்ணில் நடைபெற்றது. இந்த தொடர் முதல் ரோஹித் சர்மா பெரியளவில் ரன்களை அடிக்கவில்லை. அதன்பிறகு, ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் மகன் பிறந்ததால் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்டின் போது ரோஹித் சர்மா திரும்பினாலும், விரைவில் தனது விக்கெட்டை இழந்தார். 3வது டெஸ்ட் போட்டியில் வெறும் 10 ரன்களும், மெல்போர்ன் டெஸ்டில் 3 மற்றும் 9 ரன்கள் எடுத்தார். 5வது டெஸ்டில் ரோஹித் சர்மா தானாக விலகி கொண்டார்.
டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களுடன் 40.57 சராசரியில் 4301 ரன்கள் எடுத்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டி எப்போது..?
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி 2025 ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது.