Tamil Nadu CM MK Stalin: ஊர்ந்து கிடந்த தமிழ்நாடு! தட்டி எழுப்பி விடியலை கொடுத்துள்ளோம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
4 Years of DMK Rule in Tamil Nadu: தமிழ்நாட்டில் திமுகவின் 5வது ஆண்டு ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். திராவிட மாதிரி ஆட்சியின் வெற்றிகளை எடுத்துரைத்த அவர், வறுமை, பட்டினி, சாதி மோதல்கள் போன்றவை இல்லாத சமூகத்தை உருவாக்கியதாக பெருமிதம் தெரிவித்தார். "விடியல்" ஆட்சியின் மூலம் தமிழ்நாட்டை முன்னேற்றியதாகவும், மக்களின் குறைகளை கவனித்து தீர்த்து வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை, மே 7: தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இன்றுடன் அதாவது 2025 மே 7ம் தேதி 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக முதல் முறையாக மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) பதவியேற்றார். இதன் காரணமாக திமுக 6வது முறையாக ஆட்சி அமைத்தது. இந்தநிலையில், 5ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “5ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியாக மட்டுமல்ல, உற்சாகமாகவும் உள்ளது. ஏனென்றால், நமது திராவிட மாடல் (Dravidian Model) ஆட்சியில் தமிழ்நாடு நிமிர்ந்திருக்கிறது என்று தமிழ்நாடு மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். நான் மனநிறைவுடன் இருக்கிறேன். ஏனென்றால், உங்கள் குறைகளை காது கொடுத்து கேட்கப்படுகிறது, தீர்க்கப்படுகிறது என்று தமிழ்நாடு மக்கள் மனநிறைவுடன் இருக்கிறார்கள். ” என்றார்.
விடியலை கொடுத்துள்ளோம்:
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ 4 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என்று முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டேன். என் மீது நீங்களும் தமிழ்நாடு மக்களிடத்திலும் உண்மையாக இருக்கிறேன் என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். இன்றைக்கு நமது திராவிட மாடல் ஆட்சியில் எதெல்லாம் இல்லை என்று பட்டியல் போட வேண்டும் என்றால் வறுமை இல்லை, பட்டினி சாவு இல்லை, பணவீக்கம் இல்லை, பெரிய அளவிலான சாதி மோதல்கள் இல்லை, மத கலவரங்கள் இல்லை, வன்முறைகள் இல்லை. இப்படி சமூகத்தை பின்நோக்கி தள்ளக்கூடிய விஷயங்கள் இல்லை. இப்படி இல்லை, இல்லை, இல்லை என்ற சொல்லையே நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.
நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பயனடைந்த பலரின் குரல்களை நாம் கேட்டோம். அதேபோல், இன்று நேரிலும் கேட்டிருக்கலாம். இதுமாதிரியான குரல்களை கடந்த 4 ஆண்டுகளாக தினந்தோறும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். என்னை பொறுத்தவரை நான் ஒரு கையெழுத்து போடுகிறேன் என்றால், அதில் பலரது வாழ்க்கை தரம் உயர வேண்டும். ஏழைகளுடைய கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், சமத்துவத்தை நோக்கி இந்த சமூகம் முன்னேற்ற வேண்டும், சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதைதான் எனது வாழ்க்கையின் பயனாக நான் நினைக்கிறேன். இந்த ஆட்சி அமைக்கப்படும்போது இதற்கு நான் கொடுத்த பெயர் என்ன தெரியுமா..? விடியல் ஆட்சி. ஏனென்றால் 10 ஆண்டுகாலமாக படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டு, தன்மானம் இல்லாதவர்களால் ஊர்ந்து கிடந்த தமிழ்நாட்டை தட்டி, எழுப்பி, விடியலை கொடுத்துள்ளோம். நான் சேலஞ்ச் பண்ணியே சொல்வேன், இன்று தமிழ்நாட்டை பலமடங்கு முன்னேற்றி இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.