உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்…தமிழக அரசு அரசாணை வெளியீடு!
Assured Pension Scheme : தமிழகத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு (பழைய ஓய்வூதிய திட்டம்) தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டமானது கடந்த 1- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசாணை வெளியீடு
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இந்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர்களுடன் அமைச்சர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற 2- ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. மேலும், இது தொடர்பாக ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவும் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அதன் அடிப்படையில், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த ஜனவரி 3- ஆம் தேதி ( சனிக்கிழமை ) தெரிவித்திருந்தார். இதற்கு ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ அமைப்பினர் இனிப்புகள் வழங்கி வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
எதிர்ப்புக்கு மத்தியில் அரசாணை வெளியீடு
இந்த நிலையில், உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமானது கடந்த ஜனவரி 1- ஆம் தேதி (வியாழக்கிழமை ) முதல் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு இன்று சனிக்கிழமை (ஜனவரி 10) அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு அறிவித்த உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன. அந்த திட்டத்தில் என்ன அம்சங்கள் உள்ளது. இந்த திட்டத்தை எதற்காக அரசு ஊழியர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை பார்க்கலாம். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊழியரின் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.
அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி
இதே போல, அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இந்த ஓய்வூதியத்தை பெரும் நபர் உயிரிழந்தால், அவர் பெற்று வந்த ஓய்வூதிய தொகையில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகைவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். தங்களது பணி காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும்.
ஊழியர்களுக்கு ரூ. 25 லட்சம் பணிக் கொடை
ஓய்வு பெறும் போதும், பணியின் போதும் உயிரிழந்தாலும் பணி காலத்துக்கு ஏற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு பயன் இல்லை எனவும், இதில், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அதையே மீண்டும் திரும்பி வழங்கப்பட இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழகத்தில் ஆளுநர் இருப்பதையே மறந்து விட்டோம்… அமைச்சர் ரகுபதி!