தேசிய அளவில் மோசடி நிகழ்த்த திட்டமிட்ட சீனா கும்பல்.. ஸ்கெட்ச் போட்டு முறியடித்த தமிழ்நாடு போலீஸ்!
Tamil Nadu Cyber Police Bust China's Scam | சீனாவை சேர்ந்த சைபர் கிரைம் மோசடி கும்பல் ஒன்று இந்தியாவின் சில மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் 8 பேரிடம் மோசடி நடத்த திட்டமிட்டு வந்தது. இதனை முன்கூட்டியே கண்டுபிடித்த தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார், திட்டமிட்டு சதியை முறியடித்துள்ளனர்.

சென்னை, ஜூலை 03 : சீனாவை சேர்ந்த சைபர் கிரைம் கும்பலால் நிகழ்த்தப்பட இருந்த தேசிய அளவிலான மோசடியை தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் முறியடித்துள்ளனர். ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிலரை இந்த கும்பல் மோசடி செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அதனை முன்கூட்டியே கண்டறிந்த தமிழ்நாடு சைபர் கிரைம் போலிசார் திட்டமிட்டு சதியை முறியடித்துள்ளனர். இந்த நிலையில், சீனா சைபர் கிரைம் கும்பலின் மோசடி திட்டம் முறியடிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியர்களை குறிவைத்த சீனா மோசடி கும்பல்
சீனாவை சேர்ந்த சைபர் கிரைம் மோசடி கும்பல் ஒன்று ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா இரண்டு நபர்களையும், டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு நபரையும் மோசடி செய்ய திட்டமிட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சீனா மோசடி கும்பலில் இந்த சதி திட்டத்தை முன்கூட்டியே தெரிந்துக்கொண்ட தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார், இந்த மாநிலங்களில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
சீனா மோசடி கும்பலால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த அந்த 8 பேரும் காவல் நிலையத்தில் எந்த விதமான புகாரும் அளிக்காத நிலையில், அவர்கள் அதிக லாபம் தரும் முதலீடு மோசடியில் சிக்கியிருந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வழங்கிய தகவலின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.




இந்த நிலையில், மோசடி சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் தங்களது பணத்தை மோசடி கும்பலுக்கு அனுப்பாமல் சுதாரித்துக்கொண்டுள்ளனர். இதன் மூலம் சர்வதேச அளவில் நடைபெற இருந்து மிகப்பெரிய மோசடி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.