உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு 8வது முறையாக முதலிடம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..

Organ Donation: தமிழ்நாடு தொடர்ந்து 8வது முறையாக உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 268 பேர் உடல் உறுப்பு தானம் செய்து உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்,

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு 8வது முறையாக முதலிடம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..

கோப்பு புகைப்படம்

Published: 

03 Aug 2025 06:30 AM

சென்னை, ஆகஸ்ட் 3, 2025: உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருந்து வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இருக்கக்கூடிய தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் பற்றி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், ” மத்திய அரசு தரப்பில் உடல் உறுப்பு தானம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மாநில அரசின் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணனிடம் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கியிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பு தானம் வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்:

உறுப்பு தானம் வழங்குவதில் இந்தியாவிற்கு தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக இருப்பது கூடுதல் சிறப்பாகும். இதற்கு முக்கிய காரணம் 2008 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த உறுப்பு மாற்ற சிகிச்சைகள் ஆகும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு மகத்தான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதாவது மூளை சாவு அடைந்து அவர்களது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டால், உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: ஏழை மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக.. திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

இந்த அறிவிப்பிற்கு பிறகு 479 பேர் உறுப்பு மாற்று தானம் செய்து அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும் 268 பேர் உடல் உறுப்பு தானம் செய்து இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் ஆயிரம் உயிர்களைக் காப்பது தமிழ்நாடு முதன்மை மாநிலம் ஆக இருந்து வருகிறது” என பேசியுள்ளார்.

8வது முறையாக முதலிடம்:

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் தனது மேன்மையை நிலை நிறுத்தியுள்ளது. சிறந்த செயல் திறனுக்காக நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து எட்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூளை சாவு அடைந்த நோயாளிகளை பராமரிப்பதில் சிறந்த விளங்கியதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு பறந்த கார்.. நலம் விசாரிக்க நாடிய கமல்ஹாசன்!

தமிழ்நாடு முதன்மை மாநிலம் – முதலமைச்சர் ஸ்டாலின்:


இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் முக்கியமாக, “ உடல் உறுப்புகளை கொடையளிப்போருக்கு அரசு மரியாதை உடன் விடை கொடுக்கப்படும் என்று அறிவித்த 2023 செப்டம்பர் 23 இருந்து தற்போது வரை 479 பேர் தங்களது உடல் உறுப்புகளை ஈன்று பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வணக்கம்’ என தெரிவித்துள்ளார்