பொங்கல் விடுமுறை முடிந்து பயணிகள் ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் – விவரம் இதோ
Special Bus Services: பொங்கலை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவதற்காக தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேருந்துகள் ஜனவரி 17, 2026 இன்றும், நாளையும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஜனவரி 17 : பொங்கல் (Pongal) பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த மக்கள், விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்து (Bus) ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் படி ஜனவரி 17, 2026 இன்றும் ஜனவரி 18. 2026 நாளை என இரண்டு நாட்களில் மட்டும், சென்னைக்கு 12,000க்கும் மேற்பட்ட சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. தொடர் விடுமுறைகளை முடித்து ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் விடுமுறை முடிந்து பயணிகள் ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை வழங்கிய தகவலின்படி, ஜனவரி 17, 2026 சனிக்கிழமை அன்று சென்னையை நோக்கி 3,507 அரசு பேருந்துகளும், சென்னை தவிர்ந்த பிற நகரங்களுக்கு 2,060 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒரே நாளில் மொத்தம் 5,567 பேருந்துகள் சேவையில் உள்ளன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் உடனடியாக தங்கள் ஊர்களுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் ஜனவரி 18, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று, கூடுதலாக 3,100 பேருந்துகள் சென்னைக்கும், 4,080 பேருந்துகள் பிற நகரங்களுக்கும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஜனவரி 18, 2026 ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7,180 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதையும் படிக்க : தமிழகத்தில் 23- ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பு…மீனவர்களுக்கு சூறாவளிக்காற்று எச்சரிக்கை…வானிலை ஆய்வு மையம்!
இந்த இரண்டு நாட்களையும் சேர்த்து, பொங்கல் விடுமுறைக்குப் பிறகு மக்கள் பாதுகாப்பாகவும், தாமதமின்றி விரைவாக பயணம் செய்யும் வகையில், மொத்தம் 12,747 அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசலும், நீண்ட நேரக் காத்திருக்காமலும் பெருமளவில் குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நோக்கி அதிக சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் பெரும்பாலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை நோக்கி இயக்கப்படுகின்றன.
இதையும் படிக்க : பொங்கலுக்கு டாஸ்மாக் மது விற்பனை புதிய உச்சம் – 2 நாட்களில் எவ்வளவு வசூல் இத்தனை கோடியா?
பண்டிகை காலம் முடிந்து மக்கள் பெருமளவில் நகரங்களுக்கு திரும்பும் இந்த சூழலில், அரசு மேற்கொண்டுள்ள இந்த ஏற்பாடுகள் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, அரசு பேருந்து சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.