கொளுத்தும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..

Tamilnadu Weather Alert: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொளுத்தும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..

கோப்பு புகைப்படம்

Published: 

04 Nov 2025 06:15 AM

 IST

வானிலை நிலவரம், நவம்பர் 4, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் வறண்ட நிலையே நிலவுகிறது. இதனால் வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை என்பது இயல்பை விட அதிகபட்சம் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை:

கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது, அதிகபட்சமாக மதுரையில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 35.7 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 35 டிகிரி செல்சியஸ், நாகையில் 35 டிகிரி செல்சியஸ், கரூரில் 35 டிகிரி செல்சியஸ், ஈரோடில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 35 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 35.0 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக மதுரையில் இயல்பை விட 6.1 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்.. தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..

சென்னை புறநகரில் கொட்டிய மழை – பிரதீப் ஜான்:


வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பதிவு இருந்தது. குறிப்பாக, நவம்பர் 3, 2025 அன்று மாலை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகள், மீனம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், செங்கல்பட்டு, மகாபலிபுரம், பொன்மார், கேளம்பாக்கம், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்தது. நவம்பர் மாதத்தில் மேற்கு திசை காற்றின் காரணமாக இத்தகைய மழை பதிவாகுவது அரிதான ஒன்று என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அதிகபட்ச வெப்பநிலை என்பது 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.