Sivagangai Custodial Death: சிவகங்கை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. அஜித் குமார் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
Tamil Nadu CM MK Stalin Apology: சிவகங்கையில் காவல் காவலில் இறந்த அஜித் குமாரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உறவினர்கள் போலீஸ் சித்திரவதையே காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் அஜித் குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

உயிரிழந்த அஜித் குமார் - முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை, ஜூலை 1: சிவகங்கையில் (Sivagangai) போலீஸ் காவலில் இறந்ததாக கூறப்படும் கோயில் பாதுகாவலர் அஜித் குமாரின் மரணம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் மடபுரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமாரின் உறவினர்கள், 28 வயதுடைய அந்த நபர், காவல்துறையினரின் விசாரணையின் போது அடித்து சித்திரவதை செய்யப்பட்டதால் (Lockup Dead) இறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினர். இந்தநிலையில், மிகவும் மன்னிக்கவும் அம்மா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin), சிவகங்கையை சேர்ந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதாக கூறப்படும் அஜித் குமாரின் தாயார் மாலதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அஜித் குமாரின் அண்ணனிடம் ஆறுதல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்:
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!
கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்! pic.twitter.com/YhECfZx6v9
— M.K.Stalin (@mkstalin) July 1, 2025
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், “ அம்மா, ரொம்ப மன்னிக்கவும் அம்மா, தைரியமாக இருங்கள். நான் அவர்களிடம் தீவிர நடவடிக்கை எடுக்க சொக்கி இருக்கிறேன். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுமாறு அமைச்சரிடம் கூறியுள்ளேன். இதையெல்லாம் அமைச்சர் கவனித்துக் கொள்வார். தைரியமாக இருங்கள். ஒருபோதும் நடக்கக்கூடாத ஒன்று நடந்துவிட்டது. தைரியமாக இருங்கள். நடவடிக்கை எடுக்குமாறு நான் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இது போன்ற நிகழ்வை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அவர்களுக்கு தண்டனை பெற்று தருவேன். தைரியமாக இருங்கள்” என்று தெரிவித்தார். அப்போது, உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்துடன் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசிய உயிரிழந்த அஜித் குமார் சகோதர் நவீன் குமார் , “முதலமைச்சரிடம் நடந்த எல்லாவற்றையும் தொலைபேசி மூலம் கூறினேன். நடந்தது தவறுதான் என்று சொல்லி வருந்தி ஆறுதல் கூறியதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். தொடர்ந்து, நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்குவது தொடர்பாகவும் பேசினார்.” என்று கூறினார்.
வழக்கு சிபிஐக்கு மாற்றம்:
சிவகங்கை மாவட்டத்தில் அஜித் குமார் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கு, மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதாவது 2025 ஜூலை 1ம் தேதி அறிவித்தார்.
சிபிசிஐடி விசாரணை தொடரலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “சிபிஐ விசாரணை அதிக தெளிவை அளிக்கும் என்று நம்புகிறேன். வெளிப்படைத்தன்மை மற்றும் முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்காக, வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளேன். மத்திய நிறுவனத்துடன் மாநில அரசு முழுமையாக ஒத்துழைக்கும்” என்றும் கூறினார்.