வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இப்படி மீண்டும் விண்ணப்பிக்கலாம்!!
வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை கீழ்க்கண்ட வழி முறைகள் மூலம் சரிபார்த்து அறிந்து கொள்ளலாம். பெயர் விடுப்பட்டவர்கள் விண்ணப்பிக்க ஜன.18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உங்கள் பெயர் இல்லையா?மீண்டும் விண்ணப்பிக்கலாம்
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால், படிவம் 6 மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் ஜன.18ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. தொடர்ந்து, பிப்.17ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளதாகவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்ஐஆர்) முடிந்து நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த பட்டியலை வெளியிட்டனர். இந்நிலையில், இந்த பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா? இல்லை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், எவ்வாறு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: “அதிமுகவுக்கு வாக்களித்த கைகள் வேறு யாருக்கும் வாக்களிக்காது”.. விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி!
வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை கீழ்க்கண்ட வழி முறைகள் மூலம் சரிபார்த்து அறிந்து கொள்ளலாம்.
- தேர்தல் ஆணையத்தின் ECINET செயலி மூலமாகவோ அல்லது voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்திற்கோ சென்று, சம்பந்தப்பட்ட நபரின் வாக்காளர் அடையாள அட்டை எண்(EPIC) உள்ளீடு செய்ய வேண்டும். வாக்காளர் பெயர், அவரின் வயது மற்றும் எந்த தொகுதி என்ற விவரங்களையும் உள்ளீடு செய்யலாம். தொடர்ந்து, Search என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் வாக்காளர் விவரங்களை அறியலாம். அதில், உங்கள் பெயர் இருந்தால், அதிகாரப்பூர்வ வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது என்று அர்த்தமாகும்.
- அவ்வாறு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்புக்கு படிவம் 6ஐ பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம். அதேபோல், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அதற்கான காரணங்கள் குறித்து திருப்தி இல்லை என்றால், ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் ஜன.18ம் தேதி வரை தெரிவிக்கலாம்.
- அதன்படி, பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவிக்க படிவம் எண் 7, கடந்த முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, தற்போது இடம்மாறியவர்கள் படிவம் எண் 8, ஆகியவற்றை உரிய முறையில் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களை வழங்கி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். மேலும், www.elections.tn.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க: சேலத்தில் தவெக பொதுக்கூட்டம்? 5 இடங்கள் தேர்வு…அனுமதி கோரி காவல் ஆணையரிடம் மனு!
மத்திய-மாநில அரசு-பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர ஊழியர் அல்லது ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய ஆணை, தகுதியான அதிகாரி வழங்கிய பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் வழங்கிய கல்வி சான்றிதழ், தகுதியான மாநில அதிகாரி வழங்கிய நிரந்தர வசிப்பிட சான்றிதழ், வன உரிமை சான்றிதழ், சாதி சான்றிதழ், அரசு வழங்கிய நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டு சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் மட்டுமே பெயர் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.