SIR பணிகள்.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்
SIR Work Last Day: ஜனவரி 30, 2026 ஆம் தேதி வரை பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், படிவம் 6 பயன்படுத்தி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
ஜனவரி 30, 2026: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் ஜனவரி 30, 2026 தேதியான இன்றுடன் முடிவடைகிறது. தற்போது வரை, படிவம் 6 பயன்படுத்தி தமிழக முழுவதிலும் இருந்து 16.63 இலட்சம் பேர் பெயர் சேர்க்க மனு அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வரக்கூடிய பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள் தரப்பில் ஒரு பக்கம் மும்மரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தமிழகத்தில் தேர்தல் ஆணையம் தரப்பிலும் அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
SIR பணிகள்:
அதன் ஒரு பகுதியாக, 2025 நவம்பர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில், இந்தப் பணிகள் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை முன்வைத்த சூழலில், தேர்தல் ஆணையம் தரப்பில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியல் – 97.38 லட்சம் பேர் நீக்கம்:
அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் இருந்து 97.38 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக, தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடிக்கு கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்களது பெயர்களை மீண்டும் சேர்க்கவும், புதிய வாக்காளர்களை இணைக்கவும் தேர்தல் ஆணையம் மீண்டும் கால அவகாசம் வழங்கியது. அந்த வகையில், படிவம் 6 பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: கோவையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர்…கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை!
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க கால அவகாசம்:
இந்தப் பணிகளுக்காக முதலில் 2025 டிசம்பர் 19ஆம் தேதி முதல் 2026 ஜனவரி 18ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதே சமயத்தில், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முகவரி மாற்றம் செய்தவர்கள், விடுபட்டவர்கள் உள்ளிட்டோர் இந்த முகாம்கள் மூலம் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இன்றே கடைசி நாள்:
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என்ற காரணத்தினால், இந்த கால அவகாசம் மேலும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டது. அதாவது, ஜனவரி 30, 2026 ஆம் தேதி வரை பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், படிவம் 6 பயன்படுத்தி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 16,63,026 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.