பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 7 பேர் பரிதாப பலி.. சிவகாசியில் பயங்கரம்!
Sivakasi Fire Accident : சிவகாசி பகுதியில் சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவகாசி, ஜூலை 01 : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து (Sivakasi Fire Cracker Accident) ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தின்போது, பணியில் இருந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. அங்கிருக்கும் பட்டாசு ஆலைகளில் அப்பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். சிவகாசியில் அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு வருகின்றது.
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து
இதனால், ஆண்டுதோறும் நூற்றக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், 2025 ஜூலை 01ஆம் தேதியான இன்று கூட, சிவகாசியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சின்னகாமன்பட்டியில் கமல் குமாருக்கு என்பவருக்கு சொந்தமான கோகுலேஸ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 5க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது, தீடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.




இந்த வெடி விபத்தில் 3 கட்டிடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்து குறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
7 பேர் பலி
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், சிலருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடி விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக நடராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், மீனாம்பட்டியைச் சேர்ந்த ராசமாமி மகன் மகாலிங்கம் (55) என்பவரது உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்கள் அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது. ராமமூர்த்தி (45), லிங்குசாமி (45) உட்பட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைச்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாக, 2025 ஜூன் மாதம் கூட சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். யுவராஜ் என்ற பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, பணியில் இருந்த பலரும் காயம் ஏற்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்கு, மற்றொரு வெடி விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.