என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி! – ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

PMK Internal Rift : பாமக நிறுவனர் ராமதாஸ், தன் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பதுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிகாரப் போட்டியில் தந்தை மகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், பாமக எந்தக் கூட்டணியில் சேரும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி! – ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

ராமதாஸ்

Published: 

11 Jul 2025 18:00 PM

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை – மகன் மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில்  கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தன் வீட்டிலேயே ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் பரபரப்பு  குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதாச்சலத்தில் (Virudhachalam) கடந்த ஜூலை 11, 2025 அன்று நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசிய ராமதாஸ் (Ramadoss), என் வீட்டில் நான் அமரும் இடத்தில் கூட ஒட்டுக்கேட்கும் கருவி வைத்திருப்பதை கண்டுபிடித்தோம். அது லண்டனில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதை யார் வைத்தார்கள்? எதற்காக வைத்தார்கள் என்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ராமதாஸ் இல்லாத போது அன்புமணி அவரது வீட்டுக்கு சென்றது சர்ச்சையானது. மேலும் அவர் தனது அம்மாவைப் பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய ராமதாஸ், அன்புமணி அவர் வீட்டிற்கு செல்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? அவர் எனது இனிஷியலைப் போட்டுக்கொள்ளட்டும் என்று பேசினார்.

தந்தை இல்லத்திற்கு அன்புமணியின் வருகை

ராமதாஸ் காரைக்காலில் பங்கேற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியூரில் இருந்தபோது, அன்புமணி தந்தையின் திண்டிவனத்திற்கு அருகே உள்ள தைலாபுரம் இல்லத்திற்கு சென்றது, கட்சிக்குள் பதற்றத்தையும், ஊடகங்களில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி, தாயாரை சந்திப்பதற்காக தான் வீட்டிற்குச் சென்றதாக கூறப்பட்டாலும், தந்தை இல்லாத நேரத்தில் சென்றது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தந்தை-மகன் இடையே நீடிக்கும் அதிகார மோதலை மேலும் தீவிரமாக்கும் வகையில் பார்க்கப்படுகிறது. ஆனால் ராமதாஸ் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிக்க : தந்தை வீட்டில் இல்லாத சமயம்.. தைலாபுரம் விரைந்த அன்புமணி.. என்ன காரணம்?

கடந்த மே 28, 2025 அன்று அன்புமணியின் தலைவர் பதவி முடிவடைந்ததாகவும், மே 29 முதல் கட்சித் தலைமை தன்னிடம் இருப்பதாகவும் ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கட்சி யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற கேள்வி தொடர்கிறது. ராமதாஸ், “என் பெயரை அன்புமணியின் பெயருக்குப் பின்னால் வைக்கக்கூடாது. இனிஷியலை பயன்படுத்தினால் பரவாயில்லை” என கடுமையாக கூறியிருந்தார்.

இதையும் படிக்க :என் பெயரை பயன்படுத்தக் கூடாது’ அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை.. உச்சகட்ட மோதல்!

தொண்டர்களிடையே நீடிக்கும் குழப்பம்

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமக இன்னும் கட்சிக்குள் நிலவும் குழப்பங்களைத் தீர்க்க முடியாமல் தடுமாறி வருகிறது. ஒரே கட்சியில் தந்தை – மகனான ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் தனித்தனியாக செயற்பட்டு வருவது, கட்சி நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இது கட்சியின் நம்பகத்தன்மையை குறைக்கும் என கட்சித் தொண்டர்கள் கவலையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் விரைவில் இந்த பிரச்னை சரி செய்யப்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.