PMK Internal Rift: அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட வில்லை.. உறுதியாக சொன்ன ஜி.கே.மணி..!

Pattali Makkal Katchi Crisis: பாமகவில் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு ஜி.கே. மணி விளக்கம் அளித்து, அன்புமணி நீக்கப்படவில்லை என்றும், செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ராமதாஸ் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PMK Internal Rift: அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட வில்லை.. உறுதியாக சொன்ன ஜி.கே.மணி..!

அன்புமணி ராமதாஸ்- ஜி.கே.மணி

Published: 

06 Jul 2025 19:11 PM

சென்னை, ஜூலை 06: பாட்டாளி மக்கள் கட்சிக்குள் (Pattali Makkal Katchi) ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தநிலையில், இன்று அதாவது 2025 ஜூலை 6ம் தேதி காலை ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) , தனது மகனும், பாமக கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸை கட்சியின் செயற்குழுவிலிருந்து நீக்கியதாக செய்திகள் வெளிவந்தது. முன்னதாக, கட்சியின் வழிநடத்தல் மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) இடையேயான மோதல்கள் கட்சிக்குள் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், தைலாபுரத்தில் இதுகுறித்து பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி விளக்கம் அளித்துள்ளார்.

அன்புமணியை நீக்கவில்லை – ஜி.கே. மணி

தைலாபுரத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பாமக நிர்வாக குழு கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். அதில் அன்புமணி ராமதாஸை நீக்கப்பட்டதாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. காலை முதலே சில ஊடகங்களில் தவறான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதேபோல், நிர்வாக குழு பட்டியலை இன்னும் முழுமையாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிடவில்லை. அதன்படி, இதுபோன்ற முறையான அறிவிப்புகள் பாமக நிறுவனர் ராமதாஸால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

வருகின்ற 2025 ஜூலை 8ம் தேதி நடைபெறவுள்ள பாமக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.

பாமக தலைமை நிர்வாகக் குழுவில் மாற்றமா..?

முன்னதாக, பாமக தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி, புதிய 21 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதன்படி, பாமக கட்சியின் முடிவெடுப்பதில் மையப் பங்கைக் கொண்டிருந்த செயற்குழுவில், அன்புமணி ராமதாஸ், திலகபமா, பாலு, வெங்கடேஸ்வரன் மற்றும் வடிவேல் ராவணன் போன்ற பல மூத்த தலைவர்கள் இடம்பெற்றிருந்த குழு கலைக்கப்பட்டு, புதிய குழுவில் ஜி. கே. மணி, அருள், ஏ. கே. மூர்த்தி ஆகியோருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், இந்த நீக்கம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.