ஒரே வேனில் ஓபிஎஸ், செங்கோட்டையன்.. இதுதான் இபிஎஸ் ரியாக்ஷன்!
EPS reaction on sengottiayan: ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே வேனில் செங்கோட்டையன் பயணித்து சென்றது அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. கட்சி வீதிகளை மீறி செயல்பட்டுள்ள செங்கோட்டையனின் நடவடிக்கைக்கு எடப்பாடி என்ன பதில் நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

ஒரே வேனில் ஓபிஎஸ், செங்கோட்டையன்.
ராமநாதபுரம், அக்டோபர் 30: மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்தது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் மழுப்பலாக பதிலளித்துச் சென்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், இன்று காலை முதல் குடியரசுத் துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பசும்பொன் சென்று மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் தற்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் ஒன்றாக பயணித்துள்ளார். அதிமுக ஒன்றினைய வேண்டுமென வலியுறுத்திய செங்கோட்டையனை, எடப்பாடி பழனிசாமி கட்சி பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கியிருந்தார். இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் மட்டுமே செங்கோட்டையன் இருக்கிறார்.
Also read: ரூ.3கோடி பட்ஜெட்.. முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
திறந்த வேனில் ஓபிஎஸ் – செங்கோட்டையன்:
அப்படி இருக்கும் போது, வெளிப்படையாக அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒன்றாக பயணித்துள்ளார். மதுரையில் இருந்து பசும்பொன் நோக்கி ஒரே காரில் அவர்கள் இருவரும் பயணித்த நிலையில், முன் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வமும், பின் இருக்கையில் செங்கோட்டையனும் அமர்ந்திருந்தனர். பின் சிறிது தூரம் ஒரே காரில் பயணித்த அவர்கள், பின்னர் திறந்த வேனில் ஒன்றாக மேல் நின்றபடி சென்றனர்.
கட்சியின் கட்டுபாட்டை மீறி செயல்பட்டு செங்கோட்டையனின் நடவடிக்கைக்கு எடப்பாடி என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் செங்கோட்டையனையும் கட்சியில் இருந்து நீக்குவாரா? அல்லது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்வாரா? என கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் நிச்சயமாக எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலான காரியமாகமே மாறியுள்ளது.
இதுதான் இபிஎஸ் ரியாக்ஷன்:
இதனிடையே, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
Also read: ஒரே காரில் ஒன்றாக தேவர் நினைவிடம் சென்ற ஓபிஎஸ் – செங்கோட்டையன்.. உருவாகும் புதிய அணி??
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘தெரியவில்லை. வந்தால் தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன்’ என்று மழுப்பலாக பதிலளித்து அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றார்.