செங்கல்பட்டு, விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. முழு விவரம் இதோ..
Aadi Pooram Local Holiday: ஆடிப்பூரம் என்பது ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் அன்று அனுசரிக்கப்படும். இது ஆண்டாளின் அவதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, செங்கல்பட்டு ம்ற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று அதாவது ஜூலை 28, 2025 தேதியான இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
உள்ளூர் விடுமுறை, ஜூலை 28, 2025: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று அதாவது ஜூலை 28, 2025 தேதியான இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும் இந்த கோவிலில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் விருதுநகர் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் முன்னிட்டு ஜூலை 2,8 2025 தேதியான இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகப்புத்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் ஜூலை 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர் ஆடிப்பூரம் திருவிழா:
ஆண்டுதோறும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேல்மருவத்தூர் கோவில் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். அந்த வகையில் மேல்மருவத்தூர் கோயிலில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழாவை முன்னிட்டு இங்கு பக்தர்கள் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பிற கோவில்களை பொறுத்தவரையில் பாலபிஷேகம், சாமிகளுக்கான சிறப்பு பூஜைகள் என்பது அந்த கோயில் பூசாரிகள் மேற்கொள்வார்கள்.
மேலும் படிக்க: ஆடிப்பூரம் நாளில் வீட்டில் ஆண்டாள் வழிபாடு.. திருமணம் கைகூடும்!
ஆனால் மேல்மருவத்தூரில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது அந்த கோவிலில் ஒரு தனி சிறப்பாகும். ஆடிப்பூரம் திருவிழாவானது மேல்மருவத்தூர் கோயிலில் ஜூலை 26 2025 அன்று வெகு விமர்சையாக தொடங்கப்பட்டது. தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் ஜூலை 28 2025 தேதியான இன்று காலை 9 மணி அளவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் ஆடிப்பூரத் திருவிழாவில் கலந்து கொண்டு இந்த அன்னதானத்தில் கலந்து கொள்வார்கள் இதனை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 9 ஆம் தேதி வேலை நாளாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆடிப்பூரம் நாளில் இந்த 5 பொருட்கள் வாங்கினால் செல்வம் கொட்டும்!
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடித்தேரோட்டம்:
ஆடிப்பூரம் என்பது ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் அன்று அனுசரிக்கப்படும். இது ஆண்டாளின் அவதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே இந்த நாளில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் நடைபெறும். ஆடிப்பூரத் தேரோட்டம் தமிழகத்தின் புகழ்பெற்ற வைணவ திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த விழாவை காண ஆயிரம் கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். மக்களின் வசதியை கருத்தில் கொண்டு அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது.