புதிய கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்?.. அதிமுக உரிமை மீட்பு குழுவை, கழகமாக மாற்றியதால் பரபரப்பு!!
டிச.23ம் தேதி சென்னை வேப்பேரியில் நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியை தொடங்கிய நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வமும் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தெரிகிறது.

ஓ.பன்னீர்செல்வம்
சென்னை, டிசம்பர் 14: அதிமுகவில் ஏற்பட்ட கட்சி பூசல் காரணமாக அக்கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை ஓ.பன்னீர்செல்வம் உருவாக்கினார். இந்நிலையில், தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, ஓ.பன்னீர்செல்வம் கழகமாக மாற்றியுள்ளார். அதாவது, அதிமுக தொண்டர்கள் உரிமை கழகம் என்ற பெயரில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அவர் தனிக்கட்சி தொடங்க உள்ளாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஏற்கெனவே, நாளை (டிசம்பர் 15ம் தேதி) நடைபெற இருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டத்தை ஒத்திவைத்த அவர், தற்போது அந்த ஆலோசனைக் கூட்டம் டிச.23ம தேதி நடைபெறும் என்றும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: அதிமுக பாஜக தொகுதி பங்கீடு.. இத்தனை தொகுதிகளா? ஷாக்கான அதிமுக தலைமையகம்..
தனிக்கட்சி தொடங்கும் ஓபிஎஸ்:
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் வெளியேறினார். கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட மூத்த பாஜக நிர்வாகிகளை சந்திப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதுமாக இருந்து வந்தார். இதனால், அவர் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணையலாம் அல்லது தனிக்கட்சி தொடங்கலாம் என்று கூறப்பட்டது.
டிச.15 வரை இபிஎஸ்-க்கு கெடு விதித்த ஓபிஎஸ்:
இதனிடையே, கடந்த நவம்பர் 24ம் தேதி சென்னை வேப்பேரியில் அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தேர்தல்களில் அதிமுகவின் தொடர் தோல்விகளை சுட்டிகாட்டினார். அதோடு, வரும் டிசம்பர் 15 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட போவதாகவும், அதனால் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி இனியாவது திருந்த வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். அதோடு, நீங்களாக திருந்தாவிட்டால், திருத்தப்படுவீர்கள் என்றும் எச்சரித்த அவர், எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள் எனவும் அவர் சூசகமாக பேசியிருந்தார்.
நாளைய ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு:
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கு அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதோடு, தேர்தல் ஆணையம் சென்று புதிய கட்சியை பதிவு செய்வது குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், புதிய கட்சி குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் டிசம்பர் 15ம் தேதி நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதையும் படிக்க : தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…அரசியல் பின்னணி என்ன!
கழகமாக மாறிய ஓபிஎஸ்-ன் உரிமை மீட்பு குழு:
இந்நிலையில், தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, ஓ.பன்னீர்செல்வம் கழகமாக மாற்றியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள YMCA திருமண மண்டபத்தில் 23.12.25 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் என நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசியலில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில், இந்த கூட்டத்தில் அவர் புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.