இனி வேளச்சேரி – தாம்பரம் 10 நிமிடங்களில் செல்லலாம்- சென்னை மெட்ரோவின் புதிய திட்டம்
Chennai Metro Expansion Plan: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழித்தடத்துடன் இணைக்கப்பட்டு, கிண்டி வழியாக தாம்பரம் முதல் வேளச்சேரி வரை சுமார் 21 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

மாதிரி புகைப்படம்
சென்னை, டிசம்பர் 26: தாம்பரம் (Tambram) முதல் வேளச்சேரி வரை வெறும் 10 நிமிடங்களில் சென்றடையும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் (Metro Train) திட்டம் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது. இதன் மூலம், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டெட் நிறுவனம், தாம்பரம், கிண்டி, வேளச்சேரி ஆகிய பகுதிகளை இணைக்கும் புதிய மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்க முடிவு செய்துள்ளது.
வேளச்சேரி – தாம்பரம் இனி 10 நிமிடங்களில் போகலாம்
தற்போது, மெட்ரோ ரயில் முதல் கட்டத்தில் பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் – செந்தாமஸ் மவுண்ட் மற்றும் நீல வழித்தடத்தில் விம்கோ நகர் டிப்போ – விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக, மாதவரம் – சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி பைபாஸ் – மெரினா கடற்கரை மற்றும் மாதவரம் – சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 2027 ஆண்டிற்குள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : தமிழக சட்டப்பேரவை ஜன.20-இல் கூடுகிறது…சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு!
இந்த நிலையில், மெட்ரோ நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், நான்காவது வழித்தடத்துக்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடம், மெரினா கடற்கரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டு, கிண்டி வழியாக தாம்பரம் முதல் வேளச்சேரி வரை சுமார் 21 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, சிஸ்டா எம்விஏ கன்சல்டிங் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிறுவனம், 120 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 96.19 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தூத்துக்குடி-மீளவிட்டான் ரயில் நிலையங்களில் இன்டர் லாக்கிங் சிஸ்டம் அமைப்பு…மதுரை கோட்டத்தில் இதுவே முதல் முறை!
இந்த புதிய மெட்ரோ வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால், தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகள் நேரடியாக கிண்டியுடன் இணைக்கப்படும். இதனால், ஜிஎஸ்டி சாலை, வேளச்சேரி சாலை உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், தினசரி அந்தப் பகுதிகள் வழியாக பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் நேரத்தை பெரிதும் சேமிக்க முடியும் என்றும், சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகரின் போக்குவரத்து அமைப்பை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் இந்த மெட்ரோ விரிவாக்கத் திட்டம், பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.