தந்தை செய்த கொடூரம்.. 3 குழந்தைகள் கழுத்தறுத்து கொலை.. தஞ்சையில் பயங்கரம்!

Thanjavur Crime News : தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று குழந்தைகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், தனது மூன்று குழந்தைகளை மதுபோதையில் கழுத்தறுத்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தந்தை செய்த கொடூரம்.. 3 குழந்தைகள் கழுத்தறுத்து கொலை.. தஞ்சையில் பயங்கரம்!

3 குழந்தைகள் கொன்ற தந்தை

Updated On: 

11 Oct 2025 06:36 AM

 IST

தஞ்சாவூர், அக்டோபர் 11 : தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது மூன்று குழந்தைகளை தந்தை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று குழந்தைகளை கொலை செய்து காவல்நிலையத்தில் அவர் சரணடைந்தார். தஞ்சாவூர் மதுக்கூர் அருகே உள்ள கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த எஸ். வினோத் குமார் (38). இவர் மதுக்கூரில் உள்ள ஹோட்டலில் சர்வராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நித்யா (35). இந்த தம்பதிக்கு 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்களும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பெண் நித்யா சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். இது வினோத் குமார் பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால், இவர்கள் இரண்டு பேருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் பெண் நித்யா தொடர்ந்து சோஷியல் மீடியாவை பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. சோஷியல் மீடியா மூலம் நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பெண் நித்யா திருவாரூரைச் சேர்ந்தவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து திருவாரூரைச் சேர்ந்த நபருடன் நித்யா சென்று விட்டதாக தெரிகிறது. இது வினோத் குமாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வினோத் குமார் மன உளைச்சலில் இருந்துள்ளது. மது போதைக்கு அடிமையாகி உள்ளார். மது போதையில் தனது மூன்று குழந்தைகளையும் அடிக்கடி திட்டியும், தாக்கியும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : ஜாமீனில் வந்த ஒரே நாளில்.. இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்.. தூத்துக்குடியில் ஷாக்

3 குழந்தைகள் கழுத்தறுத்து கொலை

இந்த நிலையில், 2025 அக்டோபர் 10ஆம் தேதியான நேற்று இரவு மதுபோதையில் வினோத் குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது இரண்டு மகள்களையும் வெளியே சென்று விளையாடுங்கள் கூறியுள்ளார். பிறகு, தனது மகனை கொஞ்சுவது போன்று நடித்துள்ளார். பின்னர், தான் மறைந்து வைத்திருந்த அரிவாளால் 5 வயது மகன் ஈஸ்வரனை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார்.

இதில் குழந்தை துடித்துடித்து உயிரிழந்தது. மேலும், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 மகள்களை வினோத் குமார் அழைத்துள்ளார். அவர்களை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். வீட்டில் மூன்று குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் இருந்தனர். இதன்பிறகு, வீட்டில் இருந்து புறப்பட்டு, மதுக்கூர் காவல் நிலையத்தில் வினோத் குமார் சரணடைந்தார்.

Also Read : ரூ.9.5 கோடியில் உயர் ரக கஞ்சா.. அசந்துபோன அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபர!

இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று குழந்தைகளை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக வினோத் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 3 குழந்தைகளை பெற்ற தந்தையே கொலை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.