Koovagam Festival: வெகுவிமரிசையாக நடந்து முடிந்த கூவாகம் திருவிழா.. கூத்தாண்டவர் கோயில் புராணக் கதை இதுதான்!
Koovagam's Chithirai Pournami: கூவாகம் திருவிழா, சித்ரை பௌர்ணமியன்று, ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொள்ளும் ஒரு சிறப்பு விழாவாகும். மகாபாரதக் கதையோடு தொடர்புடைய இந்த விழாவில், திருநங்கைகள் அரவானை நினைத்துத் தாலி கட்டி, மறுநாள் அவரது மறைவை அனுசரித்து அழுது அஞ்சலி செலுத்துவார்கள். 18 நாட்கள் நடைபெறும் இந்த விழா, கூத்தாண்டவர் கோயிலில் மையம் கொண்டுள்ளது. இந்த விழாவின் வரலாறு, மரபுகள் மற்றும் சிறப்புகள் பற்றி இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் (Madurai Chithirai Thiruvizha) இறங்கும் அதே நாளில், தலைநகர் சென்னையிலிருந்து தெற்கே சுமார் 170 கிமீ தொலைவில் உள்ள கூவாகம் என்ற சிறிய கிராமத்தில் உலக புகழ்பெற்ற கூவாகம் திருவிழா (Koovagam Festival) நடைபெறும். சித்ரை பௌர்ணமி மாதத்தில் நடைபெறும் இந்த கூவாகம் திருவிழாவிற்கு இந்தியா முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்காக திருநங்கைகள் வந்து அரவானை நினைத்து தாலியை கட்டி கொள்வார்கள். அதன்பிறகு, அடுத்த நாள் உயிரிழந்ததாக எண்ணி தாலியை அறுத்துகொண்டு அழுவார்கள். இப்படி ஆண்டுதோறும் கூவாகம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
கூவாகம் திருவிழாவின் வரலாறு என்ன..?
இந்து இதிகாசமான மகாபாரதத்தின்படி, பாண்டவர்கள் கௌரவர்களிடம் இருந்து தங்களது ராஜ்ஜியத்தை மீட்டு எடுப்பதற்காக தங்களது அண்ணன் தம்பிகளுடன் கடுமையாக போரிடுவார்கள். அன்றைய தினம் அதாவது வரலாற்றின்படி, சித்திரை பௌர்ணமி நாளான இன்று தங்களது மிகவும் வீரமிக்க வீரர்களில் ஒருவரான அரவானை பலிகொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இளம் மற்றும் திருமணமாகாததால் அரவான், நேற்று அதாவது சித்திரை பௌர்ணமிக்கு முதல் நாள் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை வைத்தார். திருமணம் ஆகி அடுத்த நாள் சாகப்போகும் அரவானை எந்த பெண்ணும் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை.
அப்போது, போரில் பாண்டவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்த கிருஷ்ணரிடம் தனது இறுதி ஆசை, தான் இறப்பதற்கு முன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அரவான் கேட்டார். அப்போது, கிருஷ்ணர் தாமே ஒரு அழகான தேவதையாக அதாவது அவதாரம் எடுத்து, அன்றைய தினம் அரவானின் மணமகளாக மாறி, அவரது ஆசையை நிறைவேற்றுவார். மறுநாளான, சித்திரை பௌர்ணமி நாளான இன்று அரவான் தனது உயிரைத் தியாகம் செய்து, பாண்டவர்களுக்காகப் போரில் வெற்றி பெறுகிறார். கிருஷ்ணர் ஆணாக இருந்தும் பெண்ணாக அவதாரம் எடுத்ததால், அவர் தங்களில் ஒருவர் என்று திருநங்கைகள் நம்புகிறார்கள்.
18 நாட்கள் திருவிழா:
கூவாகம் திருவிழா சுமார் 18 நாட்கள் நடைபெற்று, சித்ரை பௌர்ணமி நாளான இன்றுடன் முடிவடையும். கூவாகத்தில் முக்கியமானது என்றால், மையப்பகுதியில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயில்தான். இங்கு அரவானின் தலை வணங்கப்படுகிறது. பாண்டவர்கள் போரில் வெற்றி பெறும் வரை அரவானின் தலையை ஒரு மலையின் உச்சியில் வைக்க சொன்னதாக இதிகாச கதைகளில் கூறப்படுகிறது.
கூத்தாண்டவர் கோயிலில் மோகினி மற்றும் கூத்தாண்டவர் உள்ளிட்ட பல சிலைகள் இருக்கும். அங்குதான் பூசாரிகளின் கைகளால் திருநங்களைகள் தாலி கட்டிக்கொள்வார்கள். பெரும்பாலான பூசாரிகள் தலைமுறை தலைமுறையாக இதைச் செய்து வருகின்றனர், திருவிழாவின் இறுதிக்கு முந்தைய நாள், ஆயிரக்கணக்கான திருநங்கைகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்வதால், கோயிலில் கூட்டம் அலைமோதும்.
மறுநாள் காலையில், புதுமணத் தம்பதிகள் அனைவரும் கோயிலுக்கு வந்து, மணப்பெண் உடை அணிந்து, அரவானின் மணப்பெண்ணாக நின்று நடனமாடுவார்கள். அதேநாள், மாலை அரவான் பலியிடப்படுவதால், திருநங்கைகள் ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் ஒன்றாக கூடி தாலியை அறுத்து வெள்ளை சேலை அணிந்து தலையில் அடித்து அழுவார்கள். இதனுடன் சித்திரை பௌர்ணமி நாளான இன்றுடன் கூவாகம் திருவிழா முடியும்.