கல்வீச்சு நடந்ததா? நாங்க சொல்லியும் தவெகவினர் கேட்கல… டிஜிபி விளக்கம்
TVK Karur Stampede : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் கரூரில் விஜய் பேசும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து டிஜிபி விளக்கமளித்துள்ளார்.

டிஜிபி டேவிட்சன் - விஜய்
கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனடியாக மருத்துவமனை விரைந்து வந்து பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சென்னையில் இருந்து கரூர் விரைந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் அறிவித்தார்.
விபத்துக்கான காரணம் குறித்து டிஜிபி பேட்டி
இந்த கரூர் சம்பவம் குறித்து சட்ட ஒழுங்கு டிஜிபி டேவிட்சன் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அவரது பேட்டியில், தமிழக வெற்றிக் கழம் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டாா பகுதி மிகவும் ஆபத்தான இடம், ஒரு பக்கம் பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆற்றின் பாலம் அமைந்துள்ளது. அங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து நடத்த முடியாது என அவர்களிடம் விளக்கினோம். அவர்கள் கேட்ட உழவர் சந்தையும் மிகவும் குறுகலான இடம். அதனால் தான் அண்மையில் மற்றொரு கட்சி கூட்டம் நடத்த வேலுசாமிபுரத்தை பரிந்துரைத்தோம். அதை ஏற்றுக்கொண்டு தவெகவினரும் மனு கொடுத்து அந்த இடத்தில் பரப்புரைக்கு அனுமதி பெற்றனர்.
இதையும் படிக்க : இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் – தமிழக வெற்றிக் கழக தலைவர் இரங்கல்..
கல்வீச்சு சம்பவம் நடந்ததா?
அப்போது பத்திரிகையாளர்கள் கல்வீச்சு குறித்து கேள்வி எழுப்பிய போது, கரூர் விஜய் பரப்புரையில் கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. விஜய் பேசும்போது மின் தடை செய்யப்படவில்லை. கூட்ட நெரிசல் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார். மேலும் கரூரில் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்ற போது 50 மீட்டர் முன்பாகவே வாகனத்தை நிறுத்தி பேச சொல்லி தவெகவினரிடம் டிஎஸ்பி கூறியும் மறுத்துவிட்டனர். மைக் சரிாக கேட்காது அங்கு போய் பேசுவோம் என டிஎஸ்பியிடம் தெரிவித்திருக்கின்றனர் என்றார்.
மேலும் பேசிய அவர் கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் மாவட்ட எஸ்பி, 3 எடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 7 ஆய்வாளர்கள், 58 உதவி ஆய்வாளர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இதையும் படிக்க : கரூரில் நடந்த துயரமான சம்பவம் வருத்தம் அளிக்கிறது.. பிரதமர் மோடி இரங்கல்..
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் அறிவித்தார். செப்டம்பர் 27, 2025 அன்று பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 28, 2028 அன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.