திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் பெண் எடுத்த விபரீத முடிவு.. தீவிர விசாரணையில் காவல் துறையினர்..
Kanniyakumari Crime News: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கருங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி, ஜூலை 5, 2025: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாராவி பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெபமாலா. ஜெபமாலாவிற்கு வயது 26, இவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துள்ளார். இவரும் இணையம் சின்னதுரையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நித்தின் ராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். நித்தின் ராஜ் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளனர். இதன் காரணமாக பெற்றோர்களும் இறங்கி வந்து இரு வீட்டார் சம்மதத்துடன் ஜெபமாலாவிற்கும் நித்தின் ராஜிற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். 2025 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
தற்கொலைக்கான காரணம் என்ன?
அதனை தொடர்ந்து ஜெபமாலாவின் வீட்டார் ஒரு தனி வீடு கட்டி ஜெபமாலாவிற்கு வழங்கியுள்ளனர். அங்குதான் ஜெபமாலாவும் நித்தின் ராஜுன் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். நித்தின் ராஜ் பொறியியல் படித்திருந்தாலும் அவர் சரியான வேளையில் இல்லாமல் இருந்துள்ளார். மேலும் அவர் வெளிநாடு செல்வதாக ஜெபமாலாவிடம் பல தருணங்களில் குறிப்பிட்டிருந்தார். சரியான வேலை இல்லாத காரணத்தாலும் வெளிநாடு செல்வேன் என சொன்ன காரணத்தாலும் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜூலை 4 2025 தேதியான நேற்று பிற்பகல் 12 மணியளவில் ஜெபமாலாவின் தாயாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஜெபமாலா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடல் கருங்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ந்து போன ஜெபமாலாவின் தாயார் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு ஜெபமாலாவின் உடலை பார்த்து கண்ணீர் மல்க கதறி அழுதார்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தாய்:
தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெபமாலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் ஜெபமாலாவின் தாயார் புஷ்ப லதா கருங்கல் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார் இந்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஜெபமாலாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் உடலை வாங்க மாட்டோம் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா என்பவர் காருக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.