தீபாவளி செலவுக்கு பணமில்லை.. செயின் பறித்த இளைஞர் கைது!
Tamilnadu Crime News: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இளைஞர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் சிவகங்கையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செயின் பறிப்பு சம்பவங்கள்
சென்னை, அக்டோபர் 17: தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் அதனை கொண்டாட பணம் இல்லாததால் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சூளையில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அங்குள்ள ராகவா தெருவில் உள்ள வீடு ஒன்றின் முதல் தளத்தில் தனது மகனுடன் தேவகி என்ற 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மதிய வேளையில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தான் மாநகராட்சியில் இருந்து வருவதாக கூறி கொசு மருந்து அடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவரிடம் தேவகி விசாரித்து கொண்டிருக்கையில் திடீரென வீட்டின் உள்ளே நுழைந்த அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி தேவகி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க நகைகளை பதித்துக் கொண்டு தப்பியோடினார். இதனை தொடர்ந்து தனது மகனுடன் வேப்பேரி காவல் நிலையத்திற்கு வந்த தேவகி இந்த நகைப் பறிப்பு சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.
இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு.. நடுரோட்டில் அடுத்தடுத்து பெண்களிடம் செயின் பறிப்பு!
அதன் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் புரசைவாக்கத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர் அருண்குமாரிடம் இருந்து ஐந்து பவுன் நகைகள் மீட்கப்பட்ட நிலையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் சரியாக வேலைக்கு செல்லாததால் தன்னிடம் பணம் இல்லாமல் இருந்தது. இதனால் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக தேவியிடம் நகை பறித்தேன் என தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அருண் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றொரு சம்பவம்
இதனிடையே சிவகங்கை மாவட்டத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் நகைப் பறிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள கீழ்மேல்குடியைச் சேர்ந்தவர் முருகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மனைவி மேனகா நேற்று முன்தினம் (அக்டோபர் 15) மதியம் காளையார் கோவிலை அடுத்து இருக்கும் கவசகுடி கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: பேருந்தில் செயின் திருட்டு.. சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. சென்னையில் சம்பவம்!
காட்டு குடியிருப்பு அருகில் சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர் திடீரென மேனகா ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது இடித்து கீழே தள்ளியுள்ளனர். இதில் நிலை தடுமாறி விழுந்த அவர் சுதாரித்து எழுவதற்குள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அந்த இருவரும் தப்பிச் சென்றனர். இது குறித்து சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் மேனகா புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.