மக்கள் பயன்பாட்டிற்கு வரும் சென்னை பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ.. எப்போது முதல்?
Chennai Poonamalle - Vadapalani Metro: பூந்தமல்லி மற்றும் வடபழனி இடையே கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தூரம் வரை மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இது விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்குவதற்கான அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜனவரி 22, 2026: சென்னை மெட்ரோ ரயில் சேவையின் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ரயில்கள் இயக்குவதற்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மெட்ரோ ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இந்த வழித்தடத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக வரக்கூடிய பிப்ரவரி மாதம் முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை என்பது மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான போக்குவரத்து சேவையாக மாறியுள்ளது. தற்போது சென்னையில் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது, விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில் சேவையின் மூலம் போக்குவரத்து நெரிசலை வெகுவாகத் தவிர்க்க முடியும் என்பதாலும், விரைவாகச் செல்ல முடியும் என்பதாலும், இலட்சக்கணக்கான மக்கள் இதில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ:
இந்தச் சூழலில், சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட வழித்தடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால், சென்னை முழுவதும் பல்வேறு இடங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும்.
மேலும் படிக்க: திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ரித் பாரத் ரயில் சேவை…நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி மற்றும் வடபழனி இடையே கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தூரம் வரை மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இது விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்குவதற்கான அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் பாதுகாப்புச் சான்றிதழை வழங்கினால், இது உடனடியாக மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்படும்.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்:
சென்னை பூந்தமல்லி மற்றும் வடபழனி இடையே இயங்கக்கூடிய இந்த மெட்ரோ ரயில் சேவை ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓட்டுநர் தேவையில்லாமல் ‘ஆட்டோ பைலட்’ முறையில் இது இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த வழித்தடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஓட்டுநர் இல்லாமல் ரயில்கள் சோதனை முறையில் இயக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறது ஏர் இந்தியா நிறுவனம்…சென்னை-துபாய் விமான சேவை நிறுத்தம்…என்ன காரணம்?
பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த வழித்தடத்தில் முதல் ஆறு மாதங்களுக்கு ஓட்டுநருடன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் கண்காணிப்பில் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்றும், அதன் பின்னரே முழுமையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு:
இந்த மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால், பூந்தமல்லி மற்றும் வடபழனி இடையே உள்ள மக்கள் பெருமளவில் பயனடைவார்கள். குறிப்பாக அலுவலகம் செல்லும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது, ரயில் பெட்டிகளின் தயாரிப்பு தரம், அவசர காலங்களில் பாதுகாப்பு நிலை, தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு சமாளிக்க முடியும், அவசரகால வெளியேற்ற வசதி எந்த அளவிற்கு உள்ளது என்பதுபோன்ற அம்சங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் அடிப்படையில், இதற்கு இறுதி ஒப்புதல் நேற்றைய தினம் அளிக்கப்பட்டது. பாதுகாப்புச் சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டால், இது உடனடியாக மக்கள் சேவைக்கு திறந்து வைக்கப்படும்.