சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம்.. எத்தனை நாட்களுக்கு? நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
Rabies Vaccine Camp: செல்லப்பிராணி உரிமையாளர்கள் எளிதில் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில், அதாவது 2025 நவம்பர் 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, நவம்பர் 7, 2025: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் 2025 நவம்பர் மாதம் 9, 16 மற்றும் 23 ஆகிய மூன்று தேதிகளில் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த முகாம்களில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் அதற்கான உரிமத்தையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதாவது நவம்பர் 4, 2025 அன்று சென்னை வானகரம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவனை துரத்தி தெருநாய் கடித்ததில் ரத்தக்காயங்களுடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் இது பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழ்நிலைகளைத் தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி தரப்பில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெருநாய் பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளும் அவ்வப்போது பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அதற்கான உரிமம் பெற வேண்டும், தடுப்பூசிகள் முறையாக போட வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 (விதிகள் 2023) பிரிவு 292ன் படி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப்பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள், செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவது கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திருப்பூரில் 17 வயது சிறுமி கர்ப்பம்… தந்தையும் காதலனும் போக்சோவில் கைது – பரபரப்பு சம்பவம்
பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- முதற்கட்டமாக, செல்லப்பிராணிக்கு உரிமம் பெற அதன் உரிமையாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து, தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணியின் புகைப்படம் உள்ளிட்ட பிற விவரங்களை பதிவேற்றம் செய்து ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
- பதிவு செய்யும்போது தங்களுடைய கால்நடை மருத்துவமனையையும் கால்நடை மருத்துவரையும் தேர்வு செய்வது மிகவும் அவசியம்.
- அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, உரிமையாளர் தாங்கள் தேர்ந்தெடுத்த கால்நடை மருத்துவமனையிலோ அல்லது கால்நடை மருத்துவரிடமோ சென்று ரேபிஸ் தடுப்பூசி மற்றும் மைக்ரோசிப் பொருத்த வேண்டும்.
- வெறிநாய் கடி நோய் தடுப்பூசி மற்றும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட விவரங்களை, பதிவு பெற்ற கால்நடை மருத்துவர் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- மூன்றாம் கட்டமாக, இத்தகவல்கள் மண்டல கால்நடை மருத்துவ அலுவலர்களால் சரிபார்க்கப்பட்ட பின்னர், செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்படும்.
- இறுதிக்கட்டமாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்களுடைய பதிவு பெற்ற கணக்கில் உள்நுழைந்து செல்லப்பிராணி உரிமையாளர் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னையில் இலவச தடுப்பூசி முகாம்:
இது ஒரு பக்கம் இருக்க, சென்னையில் ஆறு செல்லப்பிராணி சிகிச்சை மையங்கள் இலவசமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திரு.வி.கா நகர், புளியந்தோப்பு, லாயட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இந்தச் சிகிச்சை மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: திருநெல்வேலியில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்… கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை
மேலும், செல்லப்பிராணி உரிமையாளர்கள் எளிதில் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில், அதாவது 2025 நவம்பர் 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மேற்கண்ட ஆறு மையங்களிலும், தென் சென்னையில் சோழிங்கநல்லூர் நாய் இனக் கட்டுப்பாட்டு மையத்திலும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
செல்லப்பிராணி உரிமையாளர்கள் நவம்பர் 23, 2025க்குள் தங்களது உரிமங்களைப் பெறுவது கட்டாயம் என்பதால், இந்தச் சிறப்பு முகாம்களை முழுமையாகப் பயன்படுத்தி தங்கள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்று அபராதம் செலுத்துவதைத் தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.