இனி தள்ளுவண்டி கடைகளுக்கும் உரிமம் கட்டாயம் – வெளியான முக்கிய அறிவிப்பு – எப்படி பெறுவது?

Food Safety Alert : தமிழ்நாட்டில் இனி தள்ளுவண்டி கடைகளும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என உணவுப் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி தள்ளுவண்டி கடைகளுக்கும் உரிமம் கட்டாயம் - வெளியான முக்கிய அறிவிப்பு - எப்படி பெறுவது?

மாதிரி புகைப்படம்

Published: 

15 Nov 2025 20:39 PM

 IST

தமிழகத்தில் தள்ளுவண்டி மூலம் உணவுப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு இனி உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் (FSSAI) சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை  நவம்பர் 15, 2025 அன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான தள்ளுவண்டி கடைகளுக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.  தமிழகத்தின் கிராமங்கள், நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா, சாமோசா, டீ (Tea), நூடுல்ஸ், சாலட் போன்ற பல்வேறு உணவுகளை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்துள்ளன. பொதுமக்கள் அதிகம் செல்லும் இந்த தெரு உணவுகளின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தள்ளுவண்டி கடைகளுக்கு உரிமம் கட்டாயம்

உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிவிப்பில், உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் ஒவ்வொரு தள்ளுவண்டி கடையும் FSSAI உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உரிமம் பெறாத கடைகளுக்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அபராதம் அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. மேலும், தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் எந்த சிரமமும் இன்றி உரிமம் பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : பதிவு செய்த கட்சி என்ற அடிப்படையில்.. இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு விஜய் எழுதிய கடிதம்..

உரிமம் பெற விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, அல்லது அருகிலுள்ள இ-சேவை மையங்களில் FSSAI சான்றிதழை இலவசமாக பெற முடியும் எனவ உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. மக்கள் ஆரோக்கியமான, சுகாதாரமான உணவுகளை பெறுவதை இந்த உறுதி செய்யும் என கூறப்படுகிறது. இதன் மூலம் தவறான உணவுகள் மூலம் மக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம்

இந்த அறிவிப்புக்கு இணங்க, ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியத்திற்கும் உட்பட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, தங்கள் பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு, உரிமம் பெற்றுள்ளார்களா என்பதை சரிபார்க்க உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கவும், சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவிக்கப்படுள்ளது.

இதையும் படிக்க : “தமிழ்நாடு தான் பாஜகவின் அடுத்த இலக்கு”.. நயினார் நாகேந்திரன் சூளுரை!

பொதுமக்கள் பயன்படுத்தும் உணவுகளின் தரத்தை பாதுகாக்கவும், உணவு மூலம் வரும் நோய்களைத் தடுப்பதற்கும், தள்ளுவண்டி உணவுக் கடைகளின் சுத்தமான செயல்பாட்டை உறுதி செய்யவும், இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது. சமீப காலமாக சுகாதாரமற்ற உணவுகளால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும செய்திகள் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.