தமிழகத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவி பெரும் சேதம்…
Tamilnadu Forest Fire: தமிழகத்தின் பல மாவட்டங்களில் காட்டுத்தீ பரவியது. தென்காசி, தேனி, சாத்தூர் பகுதிகளில் வனம் மற்றும் பயிர்கள் சேதமடைந்தன. வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். கோடை வெப்பமே முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

பற்றி எரியும் காட்டுத்தீ
தென்காசி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ விரைவாக பரவி மரங்கள், செடிகள் கருகின. வனத்துறையினர் தீ அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்பட்டதாக அச்சம் நிலவுகிறது. தேனி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 200 ஏக்கர் வனம் எரிந்து சேதமடைந்தது. சாத்தூர் அருகே காட்டுத்தீ பரவி பட்டாசு ஆலைகளுக்கும் அபாயம் ஏற்பட்டது. பொதுமக்கள் தகவலால் தீயணைப்புத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். குறிப்பாக கோடை கால வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும்.
தென்காசி மலைப்பகுதியில் காட்டுத்தீ
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோவிந்தப்பேரி பகுதியில் பள்ளகாடுபட்டி பொத்தை மலை உள்ளது. இங்கு அடர்ந்து வளர்ந்த மரங்கள், செடி-கொடிகள், ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. நேற்று இந்த மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் அருகில் இருந்த மரம், செடி-கொடிகள் என அனைத்துக்கும் தீ மளமளவென வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த திடீர் தீ விபத்து அப்பகுதியில் உள்ள இயற்கை வளங்களுக்கும், உயிரியல் சமநிலைக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
வனத்துறையினர் தீ அணைப்பு நடவடிக்கை
இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் வனத்துறையினர் உடனே அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீயின் தீவிரம் காரணமாக வனப்பகுதியில் உள்ள அரியவகை மரங்கள் மற்றும் செடி-கொடிகள் கருகின. தீ பரவிய பரப்பளவு அதிகமாக இருந்ததால், அதை கட்டுப்படுத்த வனத்துறையினர் கடுமையாக பாடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்தில் வனவிலங்குகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடும் வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீ விபத்து
தேனி: பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வனப்பகுதியில் இரண்டு இடங்களில் காட்டுத்தீ பரவியது. பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக 200க்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதிகள் எரிந்து நாசமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகரிப்பதோடு, விலங்குகளின் வாழ்விடங்களையும் அழித்து விடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான வெப்ப அலை மற்றும் உலர்ந்த சூழ்நிலை காரணமாக தீ வேகமாக பரவியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சாத்தூர் அருகே காட்டுத்தீ மற்றும் அபாய நிலை
சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டி – மேட்டுப்பட்டி இடையிலான காட்டுப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. மக்காச்சோளம், பருத்தி பயிரிடப்பட்டுள்ள இப்பகுதியில் கோடை காலத்தில் களைப்பயிர்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. காட்டுத்தீ அப்பகுதி முழுவதும் பரவியதால், அருகிலுள்ள பட்டாசு ஆலைகளுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது. ஆடு மேய்க்கும் நபர்கள் தீயைக் கண்டு சாத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரிய விபத்தாக மாறாமல் தடுக்க விரைந்து செயல்பட்ட பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் நடவடிக்கை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.