CP Radhakrishnan: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கா?
CP Radhakrishnan Family Expressions: சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அவரின் சொந்த ஊரான கோவையில் பாஜக தொண்டர்களும், அவரின் ஆதரவாளர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மை பலம் காரணமாக அவரது வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.

சி.பி.ராதாகிருஷ்ணன்
கோயம்புத்தூர், ஆகஸ்ட் 18: துணை குடியரசு தலைவர் (Vice Presindent of India) வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்ட்ரா ஆளுநரும், தமிழக அரசியல்வாதியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் (C.P.Radhakrishnan) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் அவரின் ஊரான கோயம்புத்தூரில் பாஜக ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயார் செய்தியாளர்களை சந்தித்தார்.
எல்லாம் ஆண்டவனின் அருள் தான்
அப்போது, “துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்படுவார் என்பதை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அன்றைய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பெயரை தான் இவர் பிறந்த போது சூட்டினேன். இந்நாளில் அப்படியான பதவிக்கு செல்வார் என நினைத்து வைக்கவில்லை. ஆண்டவனுடைய அருள் காரணமாக தமிழ்நாட்டிற்கும் நமக்கும் ஒரு பெருமை கிடைத்துள்ளது” என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி தெரிவித்த மாமனார்
தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனின் மாமனார் கருப்பசாமி பேட்டியளித்துள்ளார். அதில், “1985 ஆம் ஆண்டு சிபி ராதாகிருஷ்ணனுக்கும் எனது மகளுக்கும் திருமணம் நடைபெற்றது. அவர் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. என்னுடைய தொழில் அனைத்தையும் அவர்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தொழிலிருந்து விலகிவிட்டார்.
மாப்பிள்ளை துணை குடியரசு தலைவர் என்றால் மாமனாருக்கு சொல்ல முடியாத அளவிற்கு சந்தோஷம் உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான போது கண்டிப்பாக இந்த பதவிக்கு சிபி ராதாகிருஷ்ணன் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது அது நடந்து விட்டது. டெல்லியில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் உடல் நலக்குறைவு காரணமாக நான் பங்கேற்பது சந்தேகம்தான். இருந்தாலும் செல்ல முயற்சிப்பேன்” என கூறியுள்ளார்.
வெற்றி வாய்ப்பு முகம்
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல் நிலையை காரணம் காட்டி சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார். இது அரசியல் உலகில் மிகப்பெரிய அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2025 செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இப்படியான நிலையில்தான் மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழகத்தின் மூத்த அரசியல் வாதிகளில் ஒருவரான சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக வேட்பாளர்கள் உள்ள நிலையில் அவரின் வெற்றி வாய்ப்பு எளிதாகியுள்ளது.