புதுக்கோட்டை : பேனரில் அமைச்சர் மெய்யநாதன் படம் மிஸ்ஸிங்.. வாக்குவாதம்

Pudukkottai DMK Infighting: புதுக்கோட்டை திமுகவில் மாநகர பொறுப்பாளர் நியமனம் தொடர்பாக கடும் போராட்டம் வெடித்துள்ளது. ராஜேஷ் நியமனத்தை எதிர்த்து வட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அமைச்சர் கே.என். நேருவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த பதாகையில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மெய்யநாதனின் படம் இடம்பெறாததை தொடர்ந்து சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை : பேனரில் அமைச்சர் மெய்யநாதன் படம் மிஸ்ஸிங்.. வாக்குவாதம்

அமைச்சர் மெய்யநாதன், அமைச்சர் நேரு

Published: 

09 Jul 2025 10:12 AM

புதுக்கோட்டை ஜூலை 09: புதுக்கோட்டையில் (Pudukkottai) திமுகவின் (Dravida Munnetra Kazhagam) வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், மாநகரப் பொறுப்பாளர் நியமனத்தை எதிர்த்து வட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் கே.என்.நேருவை (Minister K.N. Nehru) வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் பொறுப்பாளர் செந்தில் (Former in-charge Senthil) மரணத்தைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட ராஜேஷை மாற்றவே கோரிக்கை வலுத்துள்ளது. கடந்த 3 மாதங்களாகவே இதே கோரிக்கையுடன் தொடரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. “அவனை மாற்று, இல்லையெனில் எங்களை நீக்கு” என்ற முழக்கத்துடன் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதனின் படம் இடம்பெறாததை தொடர்ந்து சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர் கே.என்.நேருவுடன் கடுமையான வாக்குவாதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவின் உள்கட்சி முரண்பாடுகள் வெடித்தெழுந்துள்ளன. புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக வடக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், மாநகர பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜேஷை மாற்றக் கோரி, வட்டச் செயலாளர்கள் மற்றும் பல திமுக நிர்வாகிகள், பதாகைகள் ஏந்தி குறித்த அமைச்சர்களை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமைச்சர் கே.என்.நேருவுடன் கடுமையான வாக்குவாதமும் இடம்பெற்றது.

கட்சிக்குள் நம்பிக்கையிழப்பு மற்றும் எதிர்ப்பு

இதன் பின்னணியில், செந்தில் என்பவர் புதுக்கோட்டை மாநகரத் திமுக செயலாளராக இருந்த நிலையில் கடந்த டிசம்பரில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர், நகர மேயரின் கணவரும் ஆவார். இந்த நிலையில் அந்தப் பதவிக்கு பல மூத்த நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லாவின் ஆதரவாளரான ராஜேஷ் நியமிக்கப்பட்டதிலிருந்து, கட்சிக்குள் நம்பிக்கையிழப்பு மற்றும் எதிர்ப்பு ஆரம்பமானது.

Also Read: மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு முறைகேடு.. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு.. 

“அண்ணே அவன தூக்குங்கண்ணே” என கோஷம்

பொறுப்பாளர் நியமனத்துக்கு எதிராக, கடந்த 3 மாதமாகவே கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போன்று, இந்நாள் (ஜூலை 8) நடைபெற்ற கூட்டத்திலும், “மாநகரப் பொறுப்பாளரை மாற்று” என முழக்கமிட்டு போராட்டம் நடைபெற்றது. அமைச்சர் நேருவை கூட்டத்திற்கு நுழைய விடாமல் தடுத்து, “அண்ணே அவன தூக்குங்கண்ணே” என கோஷம் எழுப்பிய திமுகவினர், கட்சி தலைமை கேட்காமல் இருக்க முடியாத வகையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பேனரில் அமைச்சர் மெய்யநாதன் படம் மிஸ்ஸிங்

புதுக்கோட்டை மாவட்ட திமுகவின் பி.எல்.2 கூட்டங்கள் 08.07.2025 அன்று நடைபெற்றன. தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களை இணைத்த இந்த கூட்டங்கள், மண்டல பொறுப்பாளரும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், தெற்கு மாவட்ட கூட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த பதாகையில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மெய்யநாதனின் படம் இடம்பெறாததை தொடர்ந்து சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

அதனுடன், வடக்கு மாவட்ட பி.எல்.2 கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போது, மாநகர பொறுப்பாளர் ராஜேஷின் நியமனத்தை எதிர்த்த குழுவினர் பதாகைகள் ஏந்தி “மாநகரப் பொறுப்பாளரை மாற்ற வேண்டும்” என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில், திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எதிர்ப்பால் நிகழ்ச்சி பரபரப்பாக முடிந்தது.

கட்சிக்குள் நம்பிக்கையிழப்பு மற்றும் எதிர்ப்பு

முன்னதாக, சென்னை வரை சென்று கட்சித் தலைவரிடம் மனு அளித்தும் தீர்வு எட்டப்படவில்லை என்ற காரணத்தால், தொண்டர்களின் பொறுமை குலைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “மாநகர பொறுப்பாளரை மாற்றவில்லை என்றால் எங்களை நீக்குங்கள்” என கடுமையாக எதிர்வினை தெரிவித்தனர். இதனால், கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர்களும் பதற்றத்திற்கு உள்ளாகினர்.

தற்போது தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இவ்வாறு கட்சி உள்கட்சி விரிசல் ஏற்படுவது, திமுகவுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கின்றனர். எனவே, மாநகர பொறுப்பாளர் நியமன விவகாரத்தில் தலைமை உடனடியாக தீர்வு காண வேண்டும் என கட்சி தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.