தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? – தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை
Diwali Holiday 2025: தீபாவளி பண்டிகை 2025 அக்டோபர் 20 திங்கட்கிழமை கொண்டாடப்படுவதால், மறுநாள் அக்டோபர் 21 செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை விட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியூரில் பணிபுரியும் மக்கள் சிரமமின்றி ஊர் திரும்பி பணிக்குச் செல்ல இது உதவும்.

தீபாவளி
தமிழ்நாடு, அக்டோபர் 13: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் வெளியூரில் உள்ள மக்கள் ஊர் திரும்பும் வகையில் விடுமுறை விடப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் பறந்த வண்ணம் உள்ளது. இந்த விவகாரத்தில் விடுமுறை விடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் வெளியூர்வாசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில் கடைவீதிகளிலும், பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, இறைவழிபாடு செய்து, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படும் ஒரு அற்புதமான பண்டிகை தீபாவளி என்பதால் இதனை தவற விடுவதற்கு யாருக்கும் மனம் இருக்காது.
முன்கூட்டியே கிளம்பும் வெளியூர் மக்கள்
இப்படியான நிலையில் தீபாவளி திங்கட்கிழமை வருவதால் வெளியூரில் இருக்கும் மக்கள் பெரும்பாலானவர்கள் வெள்ளிக்கிழமை மாலை முதல் (அக்டோபர் 17) தங்கள் சொந்த ஊருக்கு புறப்படும் திட்டத்தில் இருந்து வருகிறார்கள். இதற்காக அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் வழக்கமான ரயில்களில் இரண்டு மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.
Also Read: தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க ஆசையா? வெடிக்கும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!
இதனால் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. அதேசமயம் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வழக்கமானதை விட மூன்று மடங்கு அதிகம் வைத்து விட்டாலும் சொந்த ஊரில் குடும்பத்தினரை நண்பர்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏதேனும் ஒரு பண்டிகை வந்தால் மக்கள் வெளியூரில் இருந்து மீண்டும் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பும் வகையில் சிறப்பு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து வருகிறது.
Also Read: தீபாவளிக்கு முன் சப்ரைஸ்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள்.. தேதி குறித்த தமிழக அரசு
அக்டோபர் 21 அரசு விடுமுறையா?
அந்த வகையில் திங்கட்கிழமை தீபாவளி வருவதால் மக்கள் முன்கூட்டியே வார இறுதி நாட்களோடு பண்டிகையை கொண்டாட சென்று விடுகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அக்டோபர் 20 இரவு மீண்டும் பணியிடங்களுக்கு திரும்ப முடியாது என சொல்லப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சிறப்பு விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்கனவே கடந்த அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை மற்றும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய இரு அரசு விடுமுறைகளும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் வந்தது. இதனால் வார இறுதி நாட்களோடு தொடர் விடுமுறை கிடைக்க வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை விடக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி அனைவரும் கொண்டாடும் பண்டிகை என்பதால் விடுமுறை விடப்படுவதற்கு வாய்ப்புகள் பெருமளவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.