Ditwah Cyclone Live : இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Ditwah Cyclone : தித்வா புயல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-ஆம் தேதி) , வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும். இதனால் வட தமிழக மாவட்டங்களில் கனமழை எதிர்பார்ப்பு
டிட்வா புயல் காரணமாக நவம்பர் 29, 2025 நள்ளிரவில், தமிழக கடற்கரையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் புயல் மையம் கொள்ளும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 70 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் நவம்பர் 30 அதிகாலை புயல் தமிழக – புதுச்சேரி கடற்கரையில் சுமார் 50 கி.மீ தொலைவில் மையம் கொள்ளும் எனவும் அதன் தாக்கம் மாலை வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை இருக்கும் என எச்சரிக்கை
LIVE NEWS & UPDATES
-
நீரில் மூழ்கிய 1.63 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிற்கள்
தித்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் பகலில் துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 1.63 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது.
-
புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
தித்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் வட தமிழகத்தில் சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
போக்குவரத்து பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையில் சாலையில் பழமையான ஆலமரம் விழுந்தது. இதனால் இரவு முதல் தற்போது வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-
மெரினா கடற்கரைக்கு செல்ல தடை
தித்வா புயல் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்தது. இந்த நிலையில் அதிக காற்று வீசும் நிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், மெரினா கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
-
செம்பனார்கோவிலில் அதிகபட்ச மழை
தித்வா புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 172 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரெட் அலர்ட் வாபஸ்!
தித்வா புயல் காரணமாக நவம்பர் 30, 2025 இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், 2 மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்யுமென சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தித்வா புயல் வலுவிழந்தது
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தித்வா புயல் வலுவிழந்ததாகவும், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
கடலூருக்கு 90 கி.மீ தொலையில் புயல் மையம்
தித்வா புயல் சென்னைக்கு 150 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு 90 கி.மீ தொலையிலும் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 5 கி.மீ வேகத்தில் வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
-
வலுவிழக்கும் தித்வா புயல்
அடுத்த 3 மணி நேரத்தில் டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும் எனவும், சென்னைக்கு 150 கி.மீ, கடலூருக்கு 90 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.. 5 கி.மீ வேகத்தில் வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை மெரினா கடற்கரையில் கடற்சீற்றம்
தித்வா புயல் சென்னையை நெருங்கும் நிலையில் அதன் காரணமாக நவம்பர் 30, 2025 அன்று மெரினா கடற்கரையில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மக்கள் யாரும் அந்த பகுதிக்கு வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தென் மாவட்டங்கள் 75 கி.மீ. காற்று வீசும்
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மணிக்கு 75 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அதே வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
-
ஏன் எதிர்பார்த்த மழை இல்லை?
தித்வா புயலால் நவம்பர் 29, 2025 இரவு கடலூர், விழுப்புரம், சென்னையில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 3 மாவட்டங்களிலும் நேற்றிரவு எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாததற்கு வறண்ட காற்றின் ஊடுருவலே காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் விளக்கமளித்தார்.
-
கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
தித்வா புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில், தேனி மாவட்டம கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையை நெருங்கு தித்வா புயல்
சென்னையை தித்வா புயல் நெருங்கி வரும் நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் கருமை நிறத்தில் வானம் மேக மூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
-
மேம்பாலங்களில் கார்களை நிறுத்தவதை தடுக்க காவலர்கள்
தித்வா புயலால் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை, வேளச்சேரி 100 அடி சாலையில் அமைந்துள்ள இரண்டு மேம்பாலங்கள் மற்றும் பிரதான சாலையில் பொதுமக்கள் கார்களை நிறுத்துவதை தடுப்பதற்காக பாதுகாப்பில் ஈடுபட்ட 12 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
தரைக்காற்று எச்சரிக்கை!
தித்வா புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் தரை காற்றின் வேகம் மணிக்கு 60 – 70 கிமீ வரை வீசக்கூடும் எனவும், காற்றின் வேகம் 80 கிமீ வரை அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
தித்வா புயலால் தேவனாம்பட்டினத்தில் கடல் சீற்றம்
தித்வா புயல் எதிரொலியாக கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் கடல் சீற்றத்துடன் காட்சியளிக்கிறது. அதிவேகமாக காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காட்சியளிக்கிறது. இதனால் கடற்கரைக்கு அருகே மக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
-
சென்னைக்கு 170 கி.மீ. தொலைவில் தித்வா புயல்
தித்வா புயல் சென்னைக்கு 170 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இந்த புயல் நவம்பர் 30, 2025 அன்று மாலைக்குள், தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையில் இருந்து தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்தது 30 கி.மீ தூரத்திற்குள் மையம் கொண்டிருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் கணக்கெடுப்பு
திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி டிசம்பர் 1, 2025 முதல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்க உள்ளனர்
-
இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
தித்வா புயல் காரணமாக நவம்பர் 30, 2025 அன்று திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய 4 இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இன்று தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதியில் தொடர் மழையால் பக்தர்கள் அவதி
தித்வா புயல் காரணமாக திருப்பதியில் தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் நீர் தேங்குவதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
-
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தித்வா புயல் காரணமாக நவம்பர் 30, 2025 அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
-
நாளையுடன் விடைபெறும் கனமழை
தமிழ்நாட்டில் நாளையுடன் கனமழை விடைபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தித்வா புயலால் டிசம்பர் 2, 2025 செவ்வாய்க்கிழமைக்கு பிறகு 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வேதாரண்யத்தில் 12 செ.மீ. மழை பதிவு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, நாகை மாவட்டம் கோடியக்கரை, வேளாங்கன்னி மற்றும் வேதாரண்யத்தில் 12 செ.மீ. என மழை பதிவு
-
இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில் காரைக்கால் மாவட்டம் (17 செ.மீ), மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் (17 செ.மீ), நாகப்பட்டினம், சீர்காழி, திருவாரூரில் 14 செ.மீ , ராமநாதரபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மற்றும் தொண்டி, நாகை திருப்பூண்டி, தஞ்சை மாவட்டம் கருங்குளம் ஆகிய பகுதிகளில் 13 செ.மீ மழை பதிவு
-
இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது – வெதர்மேன்
புயல் இரவு நேரத்தில் சென்னையை நெருங்குவதால், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டமான KTCC மற்றும் ராணிப்பேட்டையில் இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது – வெதர்மேன் தகவல்
-
2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் மழை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் 38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்
-
வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மழைநீர்
டிட்வா புயல் காரணமாக, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை
-
இதுவரை 3 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி, தஞ்சையில் 2 பேர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு. மயிலாடுதுறையில் 20 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி பலி
-
விளைநிலங்கள் பாதிப்பு
தமிழகத்தில் பெய்த மழையால் 56 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
-
எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை
புயல் காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு மழை இதுவரை பெய்யவில்லை என்றும், இதுவரை மழையால் 3 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்
-
மாலை மழை இருக்கலாம் – டெல்டா வெதர்மேன்
இன்று மாலை சென்னையை நோக்கி நகரும் போது புதிய மேகங்கள் உருவாகி மழை தீவிரமடையவும் வாய்ப்பு – டெல்டா வெதர்மேன்
-
மேக கூட்டங்களை உருவாக்க முடியாமல் திணறல்
புயலின் மையப்பகுதியை நோக்கி ஊடுருவிய வறண்ட காற்று மற்றும் காற்று முறிவால் பாதிக்கப்பட்டு டிட்வா மேக கூட்டங்களை உருவாக்க முடியாமல் திணறி வருவதாக டெல்டா வெதர்மேன் தகவல்
-
கடலூரிலும் கடல் கொந்தளிப்பு
டிட்வா புயல் வடக்கு நோக்கி நகர்ந்து சென்றாலும் கடலூரில் மிதமான மழை பெய்கிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
-
தாழ்வான பகுதியில் மழைநீர்
ராமேஸ்வரம் : திட்வா புயலால் கனமழை பெய்த நிலையில் தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்துள்ளது. அங்குள்ளவர்கள் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
-
சென்னையில் கடல் கொந்தளிப்பு
திட்வா புயல் காரணமாக சென்னை கடற்கரையில் காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது
-
டெல்டாவில் மிதமான மழை
டிட்வா புயல் வடக்கு நோக்கி நகர்ந்து சென்றாலும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது
-
டிட்வா புயல் தொலைவு என்ன?
வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளிலிருந்து , குறைந்தபட்ச தூரமாக, இன்று 30ம் தேதி நண்பகல் 70 கிலோ மீட்டர் தொலைவிலும், மாலை 30 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலவக்கூடும்
-
மதுரை நிலைமை இதுதான்
மதுரையிலும் இதேபோன்ற வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு பகல் நேர வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்த பதிவாகியுள்ளது
-
நெல்லையில் கடும் குளிர்
திருநெல்வேலியில் நேற்று 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே பதிவாகி, இது கடந்த நூற்றாண்டில் இல்லாத குறைந்த பகல் நேர குளிர் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஊட்டி போல மாறிய வானிலை
மதுரை முதல் கன்னியாகுமரி வரை பல பகுதிகள் ஊட்டி–கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேச குளிரை உணர்ந்து வருகின்றன
-
தென் தமிழகத்தில் கடும் குளிர்
தென் தமிழகத்தை நடுங்கவைக்கும் அளவிற்கு கடந்த சில நாட்களாக அசாதாரண குளிர் பதிவாகி வருகிறது. டிட்வா காரணமாக காற்றழுத்த மாற்றம் ஏற்பட்டு, பல மாவட்டங்களில் பகலில்கூட வெப்பநிலை திடீரென குறைந்துள்ளது
-
மாலையில் மழை இருக்கும்
டிட்வா வலுவிழந்தாலும் சென்னை பகுதியில் மாலை அல்லது இரவு நேரங்களில் நல்ல மழை பதிவு இருக்கும் – வெதர்மேன்
-
இடையிடையே மழை ஏற்படும்
பகல் நேரங்களில் மேக கூட்டங்கள் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட தமிழகத்தில் இடையிடையே மழை ஏற்படும் – வெதர்மேன்
-
வெற்று சுழற்சியாக இருக்கிறது – வெதர்மேன்
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேகக்கூட்டங்களின்றி வெற்று சுழற்சியாக இருக்கிறது – வெதர்மேன்
-
மழையின் தீவிரம் குறையும் என எதிர்பார்ப்பு
‘டிட்வா’ புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழையின் தீவிரம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
-
காற்றின் வேகம் என்ன?
இன்று வடக்கடலோர தமிழகத்தில் தரைக்காற்றின் வேகம்: 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும், சில சமயங்களில் 80 கிலோமீட்டர் வேகத்திலும், வீசக்கூடும்
-
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை
நாளையை பொறுத்தவரை, டிசம்பர் 1, 2025 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
வலு குறைந்த டிட்வா – வெதர்மேன்
டிட்வா புயல் வலுவிழந்துவிட்டது. மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா மாறிவிட்டது. இன்று மாலை மீண்டும் மேகக் கூட்டங்கள் உருவாக வாய்ப்பு – தமிழ்நாடு வெதர்மேன்
-
தீவிரம் படிப்படியாக குறையும்
இன்று மாலைக்குப் பின் டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் நிலையில், வடக்கடலோர தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்டாவில் குறையும் மழை!
இரண்டு நாட்களாக கனமழை பெய்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் படிப்படியாக மழை குறைந்து வருகிறது
-
ஆரஞ்சு எச்சரிக்கை எங்கெல்லாம்?
காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளதால், ஆரஞ்சு எச்சரிக்கை
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை
நவம்பர் 30, 2025 அன்று திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் சில இடங்களில் அதிக கனமழை பதிவாகக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இன்று கனமழை இருக்கக்கூடும்
வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல் மெல்ல மெல்ல நகர்ந்து வரும் நிலையில், வடக்கடலோர தமிழகப் பகுதிகளில் இன்று கனமழை இருக்கக்கூடும் என எச்சரிக்கை
-
2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் மழை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் 38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்
-
இரவு நேரத்தில் சென்னைக்கு மழை
புயல் இரவு நேரத்தில் சென்னையை நெருங்குவதால், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டமான KTCC மற்றும் ராணிப்பேட்டையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வெதர்மேன் பதிவு
-
நள்ளிரவுக்கு மேல் வட தமிழக கடற்கரையை வந்தடையும் புயல்
தித்வா புயல் வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே 80 கி.மீ. தூரத்திலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 100 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது நவம்பர் 29, 2025 நள்ளிரவு வட தமிழக கடற்கரையை வந்தடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தித்வா புயல் எதிரொலி… பக்தர்கள் திருவண்ணாமலையில் மலை ஏற தடை
திருவண்ணாமலையில் டிசம்பர் 3 ஆம் தேதி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், மலை மீது பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. தித்வா புயலால் தற்போது ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மலையேறும் பாதை உறுதித்தன்மை அற்று உள்ளதாக வல்லுநர் குழு தெரிவித்ததால் பக்தர்கள் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு 280 கி.மீ. தூரத்தில் தித்வா புயல்
சென்னையில் இருந்து 280 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 30, 2025 நாளை காலை தமிழக கடற்கரையில் இருந்து 50 கி.மீ. தூரத்திலும், மாலையில் 25 கி.மீ. தூரத்திலும் புயல் நிலவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
-
கரையைத் தொடுவதற்கு வாய்ப்பு இல்லை
தித்வா புயல் கரையைத் தொடுவதற்கு வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் புயலின் மையப் பகுதி நிலவுவதற்கு தான் வாய்ப்பு இருக்கிறது. கடலோர மாவட்டங்களில் 40கி.மீ முதல் 60கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும்
நவம்பர் 30, 2025 மாலை முதல் புயல் வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது -
தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்!
புயல் தொடர்பான தகவல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்காணித்து வருவதாகவும், புயல் கரையை கடக்கும் வரை தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
செம்பரம்பாக்கம் நீர்திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 2, 500 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடையாறு ஆற்றங்கரை பகுதியில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
16 கால்நடைகள் உயிரிழப்பு
தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் 16 கால்நடைகள் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும், 24 குடிசைகள் சேதமடைந்து இடிந்துள்ளதாகவும் கூறிய அவர், இச்சேதங்களைப் பற்றி ஆய்வு நடைபெற்று வருவதுடன், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
-
நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்கள்
தமிழ் நாட்டில் தித்வா புயல் காரணமாக நவம்பர் 30, 2025 அன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட உத்தரவு
தித்வா புயல் காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான மதுபான விடுதிகள் மற்றும் மதுபான கடைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 3500 கன அடி நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
அதி கனமழை எச்சரிக்கையால் பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 3500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது; நவம்பர் 28, 2025 முதல் படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மிக கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தால் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்படும். பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
புதுச்சேரி கடற்கரை பகுதிக்கு மக்கள் செல்லத் தடை
தித்வா புயல் எதிரொலியாக புதுச்சேரி கடற்கரையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மக்கள் கடற்கரை மற்றும் கடற்கரை சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக காற்று வீசுவதன் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தீவிரமடையும் தித்வா புயல்… 47 விமானங்கள் ரத்து
சென்னையில் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வரும் மற்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் 47 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் விமான நிலையம் கிளம்பும் முன் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விசாரித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ராமேஸ்வரத்தில் வீடுகளுக்குள் மழை நீர் – மக்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வேர்கோடு, இந்திரா நகர், மாந்தோப்பு, என்எஸ்கே தெரு ஆகிய பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
கடலூரில் வெளுத்து வாங்கும் கனமழை
தித்வா புயல் சென்னைக்கு அருகே 10 கி.மீ வேகத்தில் நெருங்கி வரும் நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையை நெருங்கும் தித்வா புயல்
வேதாரண்யத்திற்கு 80 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள தித்வா புயல், தொடர்ந்து மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 290 கி.மீ தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கில் 110 கி.மீ தூரத்திலும் புயல் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 ஆம் எண் கூண்டு ஏற்றம்…
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடும் வானிலைக்கு துறைமுகம் உட்படும் என்பதைக் குறிக்கும், 5ம் எண் கூண்டு புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 4ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published On - Nov 29,2025 9:35 PM