3.60 லட்சம் பேருக்கு நாய்க்கடி.. 22 பேர் உயிரிழப்பு.. பொது சுகாதாரத்துறை சொன்ன பகீர் தகவல்..

Dog Bite: தமிழகத்தில் நாளுக்கு நாள் தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தற்போது வரை 3.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.60 லட்சம் பேருக்கு நாய்க்கடி.. 22 பேர் உயிரிழப்பு.. பொது சுகாதாரத்துறை சொன்ன பகீர் தகவல்..

கோப்பு புகைப்படம்

Published: 

15 Sep 2025 21:11 PM

 IST

சென்னை, செப்டம்பர் 15, 2025: தமிழ்நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 22 பேர் தெரு நாய்க்கடியால் உயிரிழந்துள்ளதாக புதிய சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் விளையாடும் போது அல்லது சாலையோரங்களில் நிற்கும் போது, தெருநாய்கள் ஒன்று கூடி அந்த குழந்தையை கடித்து குதிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தொற்று தடுப்பூசி போடப்படுகிறது. அதாவது, நாய்கள் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு சென்று, தெரு தெருவாக இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை:

இது ஒரு பக்கம் இருக்க, தெருநாய்களுக்கு உணவு அளிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதே நேரம், உணவளிப்பதற்காக தனியாக கூண்டுகளை உள்ளாட்சி அமைப்புகள் ஒதுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது. தெருநாய் கடி சம்பவங்களை குறைப்பதற்காக மாநகராட்சி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பெரிய பலன் இல்லை.

மேலும் படிக்க: சென்னையில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம்.. அனுமதி கோரி ஆணையரிடம் மனு..

அந்த வகையில், சென்னையில் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது நஸ்ருதீன் (ஆட்டோ ஓட்டுனர்) 2025 ஜூலை மாதத்தில் தெருநாய் ஒன்று கடித்தது. உடனடியாக அவர் அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பாதிப்புகள் எதுவும் இல்லை என நினைத்தபோது, திடீரென கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே ரேபிஸ் தொற்றுக்கான அறிகுறிகளும் தென்பட்டன.

இதன் காரணமாக அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், செப்டம்பர் 13, 2025 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் படிக்க: இனி வெயில் இல்லை.. அடுத்த 7 நாட்களுக்கு கொட்டித்தீர்க்க போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்

ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழப்பு:

இந்தச் சம்பவத்தையடுத்து, பொது சுகாதாரத் துறை தரப்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 3.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதே சமயம், தெருநாய் கடிகளை தடுப்பதற்கும் நாய் இனப்பெருக்கத்தை குறைக்கவும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாய் கடித்த இடத்தை உடனடியாக சோப்பு, சுத்தமான நீர் மற்றும் கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். நாய் கடித்த காயத்தில் மிளகாய், கடுகு எண்ணெய் போன்ற எதையும் தேய்க்கக்கூடாது. நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி அனைத்துத் தவணைகளையும் செலுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.