சாலையில் தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்த தம்பதி.. பறிபோன உயிர்.. தாராபரத்தில் ஷாக்!
Dharapuram Couple Dies : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சாலையில் தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து தம்பதி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்களது 12 வயது மகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புகள் அமைக்காததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

உயிரிழந்த தம்பதி
திருப்பூர், மே 04 : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து தம்பதி பரிதாபமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது, குழிக்குள் வாகனத்துடன் விழுந்து உயிரிழந்துள்ளனர். மேலும், இவர்களுடன் வந்த குழந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்த தோண்டப்பட்ட குழியில் தடுப்புகள் எதுவும் இல்லாததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (44). இவர் டாஸ்மாக் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆனந்தி (38). இந்த தம்பதிக்கு 12 வயதில் தீக்ஷயா என்ற மகள் உள்ளார்.
சாலையில் தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்த தம்பதி பலி
இவர்கள் மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் மற்றும் திருநள்ளார் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். 2025 மே 4ஆம் தேதி அதிகாலை தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் சென்றுக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் சாலையோரம் தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்துள்ளது.
இதில் குழிக்குள் தம்பதி மற்றும் அவரது மகள் விழுந்துள்ளனர். காங்கேயம் சாலையில் குள்ளாப்பாளையம் மாந்தோப்பு அருகே பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்துள்ளது. இதில்தான், கணவர் நாகராஜ், மனைவி ஆனந்தி, மகன் தீக்ஷனாவுடன் விழுந்துள்ளனர்.
இவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தபோது, எதிரே வாகனம் ஒன்று வந்ததால், பள்ளம் இருப்பதை பார்க்காமல் அந்த பக்கம் வண்டியை நாகராஜ் திருப்பியுள்ளார். பள்ளத்திற்குள் கான்கிரீட் போடுவதற்காக கம்பிகள் நீண்டு இருந்துள்ளது. இதில் உள்ளே விழுந்த தம்பதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.
தாராபுரத்தில் அதிர்ச்சி
இதில் 12 வயது சிறுமி திக்ஷனா படுகாயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். காலை முழுவதும் சிறுமி அலறி துடித்துள்ளார். காலையில் அவ்வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தம்பதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாலையில் பாலம் அமைக்கும் தனியார் நிறுவனம், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததும், எச்சரிக்கை பலகை வைக்காததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இதற்காக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை பலகை கூட வைக்காமல் பள்ளம் தோண்டப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்த தம்பதியினரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்த சிறுமிக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடாக அறிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.