மூன்று வேளை உணவு, 1000 வீடுகள், கல்வி உதவித் தொகை.. தூய்மை பணியாளர்களுக்கு 6 நலத்திட்டங்களை அறிவித்த தமிழக அரசு

Welfare Schemes : தமிழக அரசு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு, 1000 குடியிருப்புகள், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 15. 2025 அன்று துவங்கி வைத்தார். இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

மூன்று வேளை உணவு, 1000 வீடுகள், கல்வி உதவித் தொகை..  தூய்மை பணியாளர்களுக்கு 6 நலத்திட்டங்களை அறிவித்த தமிழக அரசு

நலத்திட்ட உதவிகள் வழங்கிய மு.க.ஸ்டாலின்

Published: 

15 Nov 2025 16:51 PM

 IST

தூய்மைப் பணியாளர்களுக்காக (Sanitation Workers )புதிய நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நவம்பர் 15, 2025  நடைபெற்ற சிறப்பு விழாவில் பல முக்கிய நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.  இந்த விழாவில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் மொத்தம் 31,373 தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் காலை, மதியம், இரவு வேளைகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் சத்தான உணவு வழங்கப்படும். முதல்வர் ஸ்டாலின் துவக்க விழாவில் இதற்காக உணவு விநியோகிக்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தி, தனிப்பட்ட முறையில் ஊழியர்களுக்கு உணவு வழங்கியும்  அவர்களுடன் கலந்துரையாடினார்.

தூய்மை பணியாளர்களுக்காக 1000 குடியிருப்புகள்

மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்காக 1,000 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக கார்கில் நகர் பகுதியில் 510 குடியிருப்புகளும் மற்றும் பெரும்பாக்கம் பகுதியில் 490 வீடுகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு, முதல்வர் அதற்கான ஆணைகளையும் வழங்கினார். தூய்மைப் பணியில் ஈடுபடும் போது உயிரிழந்த 2 பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்களின் குடும்பத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ‘SIR பணிகளுக்கு ஒரு மாத காலம் போதுமானது’.. சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி!!

தூய்மைப் பணியாளர் குடும்பத்தினர் தொழில் தொடங்குவதற்கு உதவும் வகையில், அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முயற்சி திட்டத்தின் கீழ் 25 பயனாளர்களுக்கு மொத்தம் ரூ.46 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இதில் ரூ.16 லட்சம் உதவியை முதல்வர் வழங்கினார். உயர் கல்வி பயிலும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உதவிடும் வகையில் புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1,260 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.2.82 கோடி மதிப்பில் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

கல்வி உதவித் தொகை

சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்காக தாட்கோ நிறுவனத்தின் மூலம் விபத்தில் மரணம் அடையும்போது உதவித் தொகை,  இயற்கை மரணம் அடையும்போது செலவு உதவி, கல்வி உதவி, திருமண உதவி, கர்ப்பகால உதவித் தொகை, கண் கண்ணாடி வாங்குவதற்கு உதவி, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்களின் கீழ் 1,000 பயனாளர்களுக்கு மொத்தம் ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதையும் படிக்க : “SIR படிவத்தை பார்த்தாலே தலை சுற்றுகிறது”.. முதல்வர் ஸ்டாலின்!!

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் தமிழக அரசு இந்த 6 புதிய நலத்திட்டங்களை அறிவித்து, நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்களை வழங்கியதற்காக, தூய்மைப் பணியாளர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.