வாக்கு அரசியலுக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை.. அரசியலில் சொகுசுக்கு இடமில்லை – முதல்வர் ஸ்டாலின்..

CM MK Stalin: அன்புக்கரங்கள் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ மக்களின் குரலாக திமுக எதிரொலித்து வருகிறது. அரசியல் என்பது மக்கள் பணி; எங்களைப் பொறுத்தவரை சொகுசுக்கு இடம் இல்லை. வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யவில்லை: என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

வாக்கு அரசியலுக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை.. அரசியலில் சொகுசுக்கு இடமில்லை - முதல்வர் ஸ்டாலின்..

கோப்பு புகைப்படம்

Published: 

15 Sep 2025 17:16 PM

 IST

சென்னை, செப்டம்பர் 15, 2025: “வாக்கு அரசியலுக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை; அரசியல் என்பது மக்கள் பணி. எங்களைப் பொறுத்தவரை சொகுசுக்கு இடமே கிடையாது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு அரசின் “தாயுமானவர் திட்டத்தின்” ஒரு பகுதியாக பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வி தொடர, மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் “அன்புக் கரங்கள்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த அன்புக் கரங்கள் திட்டம், பெற்றோரை இழந்து பராமரிக்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2000 வழங்குவதன் மூலம், அவர்கள் பள்ளிக் கல்வியை இடைநிறுத்தம் இல்லாமல் தொடர நம்பிக்கை அளிக்கும் முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது. மேலும், பெற்றோர் இருவரையும் இழந்த நிலையில், 12ஆம் வகுப்பு முடித்து பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

எங்களை பொறுத்தவரையில் சொகுசுக்கு இடம் கிடையாது:

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இன்று தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணாவின் பிறந்த நாள். குழந்தைகளின் சிரிப்புதான் அண்ணாவுக்கு நாங்கள் செய்யும் மரியாதை. மக்களின் குரலாக திமுக எதிரொலித்து வருகிறது. அரசியல் என்பது மக்கள் பணி; எங்களைப் பொறுத்தவரை சொகுசுக்கு இடம் இல்லை. நான் காலையில் ஒரு இடத்தில் மக்களிடம் பேசிக் கொண்டிருப்பேன், மாலையில் வேறொரு இடத்தில் இருப்பேன்.

பெரியார், அண்ணா, கலைஞர் எங்களுக்கு உழைப்பையே கற்றுத் தந்தவர்கள். அரசியல் என்றால் பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால்— ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருப்பது, சில கவர்ச்சித் திட்டங்களைச் செய்வது, மறுபடியும் பதவி ஆசையோடு தேர்தலுக்கு தயாராகுவது. ஆனால் எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல; பொறுப்புதான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவதுதான்” என்றார்.

மேலும் படிக்க: தினசரி நான் செங்கோட்டையன் இடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் – ஓ. பன்னீர்செல்வம்..

வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யவில்லை:

மேலும் அவர், “அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் 6,082 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும். நீங்கள் படித்து முடித்து சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இது என்ன வாக்கு அரசியல் செய்வதா? காலையில் பசியோடு வரும் குழந்தைகளைப் பார்த்து காலை உணவு திட்டத்தை உருவாக்கினேன். தற்போது 21 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இது வாக்கு அரசியலா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: விஜய்க்கு கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..

எப்போதும் துணையாக இருப்பேன்:

அதனைத் தொடர்ந்து அவர், “நீங்கள் எல்லோரும் படித்து முன்னேற வேண்டும்; இதுதான் என்னுடைய விருப்பம். எங்களுடைய லட்சியம், இந்த லட்சியத்துக்கு துணையாக இருப்பதே நம்முடைய திராவிடம் மாடல் அரசாங்கத்தின் கரம் — அன்புக் கரம். நாளை நீங்கள் படித்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ, விஞ்ஞானியாகவோ, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ உயர்ந்து, இந்த சமூகத்துக்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும்.

உங்களுடைய வெற்றியை தமிழ்நாட்டின் வரலாறு சொல்ல வேண்டும். அதற்காக உங்களுக்கு உறுதுணையாக, உங்கள் நண்பனாகவும், உங்கள் பெற்றோராகவும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.