+2 தேர்வு முடிவுகள் குறித்த பயம்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.. தஞ்சையில் அதிர்ச்சி!
12th Student Suicide In Thanjavur : தஞ்சாவூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேர்வு முடிவுகளை நினைத்து பல நாட்களாக மன உளைச்சலில் இருந்த 12ஆம் வகுப்பு மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

மாதிரிப்படம்
தஞ்சாவூர், மே 08: தஞ்சாவூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை (Thanjavur student suicide) செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ( Tamil Nadu 12th exam results) 2025 மே 8ஆம் தேதியான இன்று வெளியாக உள்ள நிலையில், பயத்தில் 12ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் படுகையைச் சேர்ந்தவர் ஆர்த்திகா (17). இவர் பாபநாசம் அரசு பெண் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்திருக்கிறார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிகள் 2025 மே 8ஆம் தேதியான இன்று வெளியாகிறது.
விடிந்தால் தேர்வு முடிவுகள்
இந்த நிலையில், தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் ஆருத்திகா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நண்பர்களுடன் இதுகுறித்து அடிக்கடி பேசிக் கொண்டிருந்தாகவும் தெரிகிறது. இந்த நிலையில், 2025 மே 6ஆம் தேதி ஆர்த்திகா வீட்டில் இல்லை. இதனால், பெற்றோர்கள் சுற்று வட்டாரத்தில் தேடி அலைந்தனர்.
அப்போது, வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் மாணவி ஆர்த்திகா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். தேர்வில் தோல்வி அடைந்துவிடுவதாக பயந்து இதுபோன்ற விபரீத முடிவை எடுத்திருக்கிறார். இதனால், பதறிய பெற்றோர், உடனே பாபநாசம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், மாணவி தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவி தேர்வு முடிவுகள் குறித்து பல நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது.
பயத்தில் +2 மாணவி எடுத்த விபரீத முடிவு
மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்.. தேர்வு முடிவு பயமா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்து, மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்வில் தோல்வி அடைந்துவிடுவதாக பயந்து, 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு முடிவுகளை 2025 மே 8ஆம் தேதியான இன்று 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிடுகிறது குறிப்பிடத்தக்கது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)