வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் அனேக மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில், ஆகஸ்ட் 13, 2025 தேதியான இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், ஆகஸ்ட் 13, 2025: மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. அதேபோல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13 2025 அன்று உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 48 மணி நேரத்தில் சற்று வலுவடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 13, 2025 தேதியான இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் பதிவான 6 செ.மீ மழை:
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மண்டலம் 02 மணலி (சென்னை) 6, செங்குன்றம் (திருவள்ளூர்) 4, திருவள்ளூர் (திருவள்ளூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), புழல் ARG (திருவள்ளூர்), மண்டலம் 03 புழல் (சென்னை), மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை) தலா 3 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 14 2025 முதல் ஆகஸ்ட் 18 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் அனேக பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர், திருவான்மியூர், தாம்பரம், மீனம்பாக்கம், கிண்டி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பதிவானது.
மேலும் படிக்க: மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் – 2 நிறுவனங்கள் தேர்வு !
குறையும் வெப்பநிலை:
இதன் காரணமாக வெப்பநிலை தாக்கமும் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்த வரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 31.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் நுங்கம்பாக்கத்தில் 30.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.