இனி நோ மழை.. ஆனால் அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும் – வானிலை ரிப்போர்ட்
Tamil Nadu Weather Update: பிப்ரவரி 1, 2026 (ஞாயிற்றுகிழமை) அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர தமிழக பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், ஜனவரி 30, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அதே சமயத்தில், பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஜனவரி 30, 2026 தேதியான இன்று மற்றும் நாளையும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும். அதே சமயத்தில், இரவு நேர வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும், தொடர்ந்து வெப்பநிலை குறையக் கூடிய நிலை நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவியதாகவும், மழை எதுவும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் ஈரோட்டில் 33.6 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சேலத்தில் 32.1 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 32.4 டிகிரி செல்சியஸ், மதுரையில் 32.4 டிகிரி செல்சியஸ், வேலூரில் 31.2 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 30.1 டிகிரி செல்சியஸ், கோவையில் 31.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகாலையில் நிலவும் பனிமூட்டம்:
மேலும் இன்றும் நாளையும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பணிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பணிமூட்டம் இருக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விருதுநகரில் 2 முறை நில அதிர்வு – பீதியில் வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள்
மிதமான மழைக்கு வாய்ப்பு:
அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 1, 2026 அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர தமிழக பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், வட தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எப்படி இருக்கும்?
குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது. பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்தாலும், இரவு நேரங்களில் வெப்பநிலை குறையக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கொடைக்கானலைப் பொருத்தவரையில் 6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக் கூடும்.