சென்னையில் கொட்டித்தீர்த்த மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்?

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் லேசான மழை பதிவாகி வருகிறது.

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்?

கோப்பு புகைப்படம்

Published: 

11 Aug 2025 06:10 AM

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 11, 2025: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேல் எடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 11 2025 தேதி ஆன இன்று தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 16 2025 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உசிலம்பட்டி (மதுரை) 9 செ.மீ மழை பதிவானது. அதனை தொடர்ந்து, பேரையூர் (மதுரை) 8, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 7, கரூர் (கரூர்), லக்கூர் (கடலூர்), கீரனூர் (புதுக்கோட்டை), குப்பணம்பட்டி (மதுரை) தலா 5, மேலாலத்தூர் (வேலூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), வாடிப்பட்டி (மதுரை), எழுமலை (மதுரை), கிருஷ்ணராயபுரம் (கரூர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), ராசிபுரம் (நாமக்கல்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை:

தென்மேற்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடையக்கூடிய நிலையில் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் நல்ல மழை இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அனேக மாவட்டங்களில் வறண்ட வானிலையை நிலவி வருகிறது. தென்மேற்கு பருவ மழை என்பது பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நீர் தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்யும்.

சென்னையில் பதிவான கனமழை:


இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read:  தூய்மைப் பணியாளர்கள் 10 நாள் போராட்டம்.. தனியார்மயமாக்கல் அவசியம் ஏன்..? சீமான் கேள்வி!

இந்த நிலையில் சென்னையில் ஆகஸ்ட் 10 2025 தேதியான நேற்று மாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழைப்பதிவு இருந்து வந்தது. மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, சின்னமலை, அடையாறு, பட்டினப்பாக்கம், தாம்பரம், ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவானது. கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.