அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகும் மழை.. வானிலை ரிப்போர்ட் இதோ..

Low Pressure In Arabian Sea: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதிகள், கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகும் மழை.. வானிலை ரிப்போர்ட் இதோ..

கோப்பு புகைப்படம்

Published: 

18 Oct 2025 10:46 AM

 IST

வானிலை நிலவரம், அக்டோபர் 18, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கக்கூடிய நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக தொடங்கியுள்ளது. இந்த சூழலில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இலட்சத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கச் சுழற்சி இன்று, அதாவது அக்டோபர் 18, 2025 அன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதிகள், கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தரைக்காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரித்து, அக்டோபர் 20 மற்றும் அக்டோபர் 21, 2025 ஆகிய தேதிகளில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் தென்கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் வருகிற நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: லீவுக்கு குற்றாலம் போக போறீங்களா? அப்போ இதை நோட் பண்ணுங்க.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..

இது ஒரு பக்கம் இருக்க, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 24, 2025 அன்று உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் கனமழை:

இதே நேரத்தில், பிற்பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. அதில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: அரபிக்கடலில் உருவாகும் புயல்? சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை.. வெதர்மேன் சொன்னது என்ன?

அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டு, தேனி மாவட்டம் தேக்கடி ஆகிய இடங்களில் தலா 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 14 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலா 12 செ.மீ., நீலகிரி மாவட்டம் அலக்கரை எஸ்டேட், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆகிய இடங்களில் 11 செ.மீ. மழை பதிவானது. திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, தென்காசி, குன்னூர், ஆயிக்குடி ஆகிய இடங்களில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் இடைவிடாது பெய்யும் மழை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக பல இடங்களில் இடைவிடாது மிதமான முதல் கனமழை பதிவாகி வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த மழை, அரபிக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.