சுட்டெரிக்கும் சூரியன்.. 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..
அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் வரக்கூடிய நாட்களில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், சில இடங்களில் மட்டும் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், மார்ச் 7, 2026: தமிழகத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் கோடை காலம் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தை எடுத்துக் கொண்டோம் என்றால், கடந்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருத்தணியில் 36.8, திருச்சியில் 37.6, திருப்பத்தூரில் 37.1, தஞ்சையில் 36, சேலத்தில் 37.1, மதுரையில் 37.6, கரூரில் 38, ஈரோட்டில் 38, தர்மபுரியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. வரக்கூடிய நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என்றும், படிப்படியாக வெப்பநிலை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு:
இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 7ஆம் தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் லேசான மழை பதிவாகக் கூடும் என்றும், ஏனைய தமிழகம் முழுவதிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களைத் தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் தவெக தலைவர் விஜய் – வெளியான அறிவிப்பு
இந்த நிலை வரக்கூடிய மார்ச் 10ஆம் தேதி வரை தொடரும் என்றும், 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் வரக்கூடிய நாட்களில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், சில இடங்களில் மட்டும் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஏஐ ஆய்வகங்கள்… 7 லட்சம் வீடுகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை எடுத்துக் கொண்டோம் என்றால், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய நாட்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.