15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. படிப்படியாக குறையும் வெப்பநிலை..
Tamil Nadu Rain Alert: சில மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெப்பநிலை தாக்கம் கணிசமாக உயர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வரவிருக்கும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், அக்டோபர் 8, 2025: கோவை, நீலகிரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே சமயம், குமரி பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழ் அடுக்குச் சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 8, 2025 தேதியான இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, கரூர், திருப்பூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளுக்கப்போகும் மழை:
அதே சமயம், அக்டோபர் 9, 2025 அன்று கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இருமல் மருந்து மரண வழக்கு – தமிழ்நாடு காரணமா? குற்றம் சுமத்தும் மத்திய அரசு?
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 10, 2025 அன்று இடியுடன் கூடிய மின்னலும் பலத்த காற்றும் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக குறையும் வெப்பநிலை:
அக்டோபர் 11 மற்றும் 12, 2025 அன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பதிவாகி வரும் நிலையில், பிற மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெப்பநிலை தாக்கம் கணிசமாக உயர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வரவிருக்கும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அண்ணாமலை போன்றவர்கள் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.. இது தான் நடந்தது – திருமாவளவன் விளக்கம்..
சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
சென்னை பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 35.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.