4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை சொல்வது என்ன?
Tamil Nadu Weather Update: வளிமண்டல சுழற்சிகளின் காரணமாக, செப்டம்பர் 12, 2025 (இன்று) மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், செப்டம்பர் 12, 2025: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை, தமிழக உள் மாவட்டங்களில் தீவிரமாக இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தல்லாகுளம் (மதுரை) , பஞ்சப்பட்டி (கரூர்) தலா 12, துறையூர் ARG (திருச்சிராப்பள்ளி), கடவூர் AWS (கரூர்) தலா 9, புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), புலிப்பட்டி (மதுரை), பெரியபட்டி (மதுரை), ன்மலை (திருச்சிராப்பள்ளி) தலா 8, பெரம்பலூர் (பெரம்பலூர்) 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, தெற்கு ஒடிசா–வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்தியா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக செப்டம்பர் 12, 2025 (இன்று) மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தரைக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்.. சென்னை ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை!
இயல்பை விட அதிகமாக பதிவாகும் வெயில்:
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 13, 2025 முதல் செப்டம்பர் 17, 2025 வரை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் நல்ல மழை பதிவாக இருந்தாலும், வெப்பநிலையின் தாக்கம் சற்றே அதிகமாக உள்ளது. அடுத்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் 34 டிகிரி செல்சியஸ், மதுரையில் 36.7 டிகிரி செல்சியஸ், கரூரில் 35 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 36.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 33.6 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கத்தில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: மக்களே நோட் பண்ணுங்க.. சென்னை மெட்ரோ ரயில் நேரம் மாற்றம்!
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் காரணத்தினால், வெப்பநிலை கணிசமாக குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.