Chennai Crime: சென்னையை உலுக்கிய ட்ரிபிள் மர்டர்.. மனைவியின் உடலை தேடும் பணியில் போலீசார்.. நடந்தது என்ன?
Crime: பீகாரைச் சேர்ந்த குடும்பத்தினரை சென்னையில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இளம் பெண்ணையும் அவரது கணவரையும் இரண்டு வயது ஆண் குழந்தையையும் கொடூரமாக கொலை செய்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீசி எரிந்து விட்டு சென்ற சம்பவமானது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜனவரி 29, 2026: சென்னை அடையார், இந்திரா நகரில், 1வது அவென்யூ சாலையில் உள்ள பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே கடந்த 26 ஆம் தேதி சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அடையார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்குமூட்டையை பிரித்து பார்த்த போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கொலையுண்ட இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
வடமாநில இளைஞர் கொலையில் நடந்தது என்ன?
மேலும், 5 தனிப்படைகள் அமைத்து இளைஞரை கொலை செய்து சாக்குமூட்டைக்குள் வைத்து வீசி சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை போலீசார் சம்பவயிடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் சாக்கு மூட்டையை கொண்டு வந்து வீசி விட்டு செல்வது பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும், கொலை செய்யப்பட்ட இளைஞர் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரில் குறித்து வைத்திருந்த சில செல்போன் எண்களை தொடர்பு கொண்டபோது, அதில் ஒரு எண் அடையாரில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகம் என்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட இளைஞர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பதும் இவர் தன் மனைவி முனிதா குமாரி என்பதும் தெரியவந்தது.
மேலும், அந்நிறுவனத்தில் காவலாளி வேலை கேட்டதும் அதற்கு செக்கியூரிட்டி நிறுவனம் தற்போது வேலை காலியில்லை, தேவைப்பட்டால் அழைப்பதாகக் கூறி அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
குடும்பத்தையே கொலை செய்த கொடூரம்:
பின்னர், கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்து விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலை செய்யப்பட்ட கௌரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உள்பட 9 நபர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களுள் சிலர் தான் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், தொடர் விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையும் காணவில்லை என்பதும் தெரியவந்தது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையையும் கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தகராறில் இளம்பெண், அவரது கணவர் மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: வெடிகுண்டை அழிக்கும் பணி… காவலருக்கு ஏற்பட்ட சோகம்… படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
குறிப்பாக, பீகார் இளைஞர் கடந்த 23 ஆம் தேதி தான், வேலைக்காக மனைவி, குழந்தையோடு வந்ததாக கூறப்படுகிறது. பீகாரைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவர் வேலை பெற்று தருவதாக கூறி அழைத்து சென்று அந்த இளைஞரின் மனைவியை நண்பர்களோடு சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது தடுத்த அவரது கணவரை அடித்து கொலை செய்ததும், அதன் பின்பு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையை கொலை செய்ததும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
குற்றவாளிகளை கைது செய்த போலீசார்:
தரமணி பாலிடெக்னிக் ஒன்றின் மாடியில் தான் இந்த 3 கொலைகளும் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ட்ரிபிள் மர்டர் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த சிக்கந்தர்(33), நரேந்திர குமார்(45), ரவீந்திர நாத் தாகூர்(45), பிகாஷ்(24) உள்ளிட்ட 5 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை தொடர்பான தடயங்களை போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். இதற்கிடையில் மனைவியின் உடலை போலீசார் பெருங்குடி குப்பை கிடங்கு, அடையாறு ஆற்றங்கரையோரம் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.