சென்னை வாசிகளே…பொங்கல் விடுமுறைக்கு இங்க போங்க…செம என்ஜாய்மெண்ட்டா இருக்கும்!
Boating Service Started: சென்னையில் உள்ள இரண்டு ஏரிகளில் படகு சவாரி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது பொங்கல் விடுமுறையை கொண்டாட நினைக்கும் பொது மக்கள் இந்த பகுதிகளுக்கு செல்லலாம். அது எந்த இடம் என்பன உள்ளிட்டவை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சென்னையில் படகு சவாரி சேவை தொடக்கம்
தமிழகத்தில் இன்று புதன்கிழமை ( ஜனவரி 14) முதல் 5 நாள்கள் பொங்கல் விடுமுறை தொடங்கி உள்ளது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களை நோக்கி படை எடுப்பார்கள். அதன்படி, சென்னையில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும், புதிதாக உருவாகியுள்ள இந்த இரு சுற்றுலா தளங்களுக்கு பொது மக்கள் தங்களது பொழுதை கழிக்க செல்லலாம். இங்கு, புதிதாக படகு சவாரி சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொது மக்களுக்கு மிக சிறந்த சுற்றுலா தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அது எந்த இடம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். சென்னை மாதவரம் ஏரியானது 2,67,540 சதுர மீட்டர் பரப்பளவும், 2,350 மீட்டர் சுற்றளவுடன் அமைந்துள்ளது. இந்த ஏரி 4,57,488 கன மீட்டர் நீர் கொள்ளளவு கொண்டதாக இருந்தது. தற்போது, இந்த ஏரியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளால் நீரின் கொள்ளளவு சுமார் 5,77,879 கனவு மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
மாதவரம் ஏரியில் மேம்பாட்டு பணிகள்
இந்த ஏரியை மேம்படுத்தும் வகையில், செடி, கொடிகள் அகற்றுதல், நடைபாதை, பக்கவாட்டு சுவர், குடிநீர் வசதி, புல் தரை நடைபாதை, மரம், செடி, கொடி நடுதல், நுழைவு வாயில், நடைபாதை, உணவு வழங்கும் அறை, காத்திருப்பு கொட்டகை, முதலுதவி மையம், வாகன நிறுத்தும் வசதி, மின் வசதி, குழந்தை விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் குறிப்பாக, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு சவாரி விடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் முடிவடைந்தன.
மேலும் படிக்க: பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்…கரும்பு ரூ.700-மல்லி கிலோ ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை!
ரூ.1.27 கோடியில் 18 புதிய படகுகள்
தற்போது, இந்த ஏரியில் ரூ.1.27 கோடியில் 2 பேர் அமரும் வகையில் 5 மிதி படகுகள், 8 பேர் அமரும் வகையில் 5 மோட்டார் படகுகள் மற்றும் 2 ஜெட்ஸ்கி ஸ்கூட்டர்கள், ஒரு எச்டிபிஇ படகு ஆகிய 18 புதிய படகுகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதே போல, மணலி ஏரியில் அம்ரூத் 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ், ரூ.10.41 கோடி மதிப்பீட்டில் படகு குழாம் அமைக்கப்பட்டது. இந்த ஏரி 29 ஏக்கர் பரப்பளவில் 1787 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது.
மணலி ஏரியில் படகு சவாரி சேவை தொடக்கம்
இந்த ஏரியில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ரூ.1.02 கோடியில் 2 பேர் அமரும் வகையில் 5 மிதி படகுகள், 4 எஃப்ஆர்பி மிதி படகுகள், 8 பேர் அமரும் வகையில் 4 மோட்டார் இயந்திர படகுகள், 2 ஜெட்ஸ்கி ஸ்கூட்டர்கள் ஆகிய 15 புதிய படகுகள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது, மாதவரம் மற்றும் மணலி ஏரிகளில் படகு சவாரி சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனவே, பொங்கல் விடுமுறைக்கு பொதுமக்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்.
மேலும் படிக்க: அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்…இறுதி கட்டத்தில் பணிகள்…கார்,டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள்!