நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் காலமானார்..
Ila Ganesan Demise: நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 15, 2025 தேதியான இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இல. கணேசன்
சென்னை, ஆகஸ்ட் 15, 2025: நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாஜக மூத்த தலைவர் இல கணேசன், நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் அவர் சென்னையில் இருக்கக்கூடிய அவரது வீட்டில் ஓய்வெடுத்து இருக்கும் பொழுது வழுக்கி விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சென்னையில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 15 2025 தேதியான இன்று மாலை 6:26 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இல கணேசன் அரசியல் வாழ்க்கை:
இல கணேசன் 1945 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் 2016 முதல் 2018 வரை ராஜ்ய சபா எம்பியாக பதவி வகித்தார். அதேபோல் 2021 முதல் 2023 வரை மணிப்பூர் ஆளுநராக இருந்தார் அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு முதல் நாகாலாந்து ஆளுநராக இருந்து வந்தார். ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இவர் செயல்பட்டு வந்தார். அதனை தொடர்ந்து பாஜகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். பாஜகவின் முகமாக இல கணேசன், பார்க்கப்பட்டார் என்பது நிதர்சனம். பாஜகவின் தேசிய செயலாளர் ஆகவும், துணைத்தலைவராகவும், தமிழக பாஜக தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் இல கணேசன்.
மேலும் படிக்க: நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!
இல. கணேசன் மறைவிற்கு எல். முருகன் இரங்கல்:
மாண்புமிகு நாகலாந்து மாநில ஆளுநரும், நமது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அய்யா இல. கணேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை சாமானிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகித்தவர், கண்ணியமான பேச்சும்… pic.twitter.com/tMjNmJDqZy
— Dr.L.Murugan (@DrLMurugan) August 15, 2025
இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ” தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை சாமானிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகித்தவர், கண்ணியமான பேச்சும் கனிவான குணமும் கொண்டவர், தனது வாழ்நாளை தேசத்திற்காகவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்தார்” என குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.