நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை: சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடல்

Nilgiris, Coimbatore Face Red Alert: தமிழகத்தில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை: சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடல்

நீலகிரி அவலாஞ்சில் 24 மணி நேரத்தில் 353 மிமீ மழை பதிவு

Published: 

26 May 2025 07:39 AM

நீலகிரி மே 26: தமிழகத்தில் கோவை, நீலகிரி (Coimbatore, Nilgiris) மாவட்டங்களுக்கு 2025 மே 26 இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் (Red alert for extremely heavy rain) விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, தேனி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை (Orange Alert Warning) வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து, அருகிலுள்ள மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்கிறது. பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்து, சில இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

தமிழகத்தில் இன்றும் பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, தேனி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், மேலும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் இந்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு

நீலகிரி மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை (25, 26 மே 2025) அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தொட்டபெட்டா, பைன்பாரஸ்ட், லேம்ஸ்ராக், அவலாஞ்சி, 9வது மைல் சூட்டிங்பாயிண்ட், படகு இல்லம், உதகை மற்றும் பைக்கார் போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளன.

அதேபோல், உதகை அரசு தாவரவியல் பூங்கா, ஊசிமலை மற்றும் ரோஜா பூங்கா ஆகிய சுற்றுலா மையங்களும் பயணிகளின் பாதுகாப்புக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை அறிவிப்புகளை கடைபிடிக்க வேண்டியதுடன், அவசர அவசர உதவிக்காக கட்டணமில்லா 1077 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசியில் வெளுத்து வாங்கிய மழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல பகுதிகளில் கனமழை தொடர்ந்த நிலையில், கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, குமரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து, பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் வீழ்ச்சியடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு

மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கொங்கன் கடலோரங்களில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு உள் கர்நாடகாவில் தீவிரமாகவும், 2025 மே 27 நாளை வலுவிழக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2025 மே 27 நாளை மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் கேரளாவில் பருவ மழை பரவி வருகிறது.

ஊட்டி நிலவரம் என்ன? – தமிழ்நாடு வெதர்மேன்

அவலாஞ்சில் 353 மிமீ (35.3 செ.மீ) மழை பதிவு

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தொடர்கிறது. 26.05.2025 காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி பகுதியில் 353 மில்லிமீட்டர் (35.3 சென்டிமீட்டர்) மழை பதிவாகியுள்ளது. இது தற்போது வரை இப்பகுதியில் பதிவாகிய மிக அதிக மழையாகும். பார்சன் வேலி, அப்பர் பவானி மற்றும் முகூர்த்தி பகுதிகளின் மழையளவு விவரங்கள் இன்னும் வரவில்லை. இந்த மழையளவுகள் மிகப்பெரிய எண்ணிக்கைகளாக இருப்பது உறுதி என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும், கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி ஆற்றின் மேல்பாய்ச்சி பகுதிகள் மற்றும் கோடகு, வயനாடு, சிக்கமங்களூர், ஹாசன் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கனமழை பதிவாகியுள்ளது. உடுப்பி மற்றும் தெற்ககன்னடா பகுதிகளிலும் தீவிர மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.