தகுதி இருந்தும் அரசின் இலவச லேப்டாப் கிடைக்கவில்லையா?.. விண்ணப்பிப்பது எப்படி?
Free govt laptop: இந்த நிலையில், தனியார் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ - மாணவியரில் இவலச லேப்டாப் பெற தகுதி கொண்ட பலருக்கு, இதுவரை வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. அதாவது, ஒரே வகுப்பறைகளில், ஒரே தகுதி கொண்ட மாணவர்களில் ஒருவருக்கு மட்டுமே லேப்டாப் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கோப்புப் புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 28: தனியார் கல்லூரிகளில் படிக்கும் தங்களுக்கு, தகுதி இருந்தும் லேப்டாப் வழங்கப்படவில்லை என, மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக அரசின், 2025-26ம் நிதியாண்டு பட்ஜெட்டில், அனைத்து கல்லூரிகளிலும் படிக்கும் மாணவ – மாணவியருக்கு, முதல் கட்டமாக, இரண்டு ஆண்டுகளில், 20 லட்சம் ‘டேப்லெட்’ அல்லது ‘லேப்டாப்’ வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில், ‘Acer,HP, மற்றும் Dell ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு மாணவர்கள் கையில் லேப்டாப்பை சேர்க்கும் வகையில், 3 நிறுவனங்களுக்கு பிரித்து ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக, 10 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
மேலும் படிக்க: தமிழகத்தை உலுக்கிய மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… மார்ச் 7- இல் வெளியாகிறது தீர்ப்பு!
8.38 லட்சம் மாணவர்ளுக்கு லேப்டாப்:
இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி இறுதியாண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு படிக்கும் மாணவ – மாணவியருக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கி வைத்தார். அரசு கல்லூரி மாணவர்களைப் போல தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 8.38 லட்சம் மாணவ – மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலருக்கு கிடைக்காத லேப்டாப்:
இந்த நிலையில், தனியார் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ – மாணவியரில் இவலச லேப்டாப் பெற தகுதி கொண்ட பலருக்கு, இதுவரை வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. அதாவது, ஒரே வகுப்பறைகளில், ஒரே தகுதி கொண்ட மாணவர்களில் ஒருவருக்கு மட்டுமே லேப்டாப் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, உயர் கல்வித்துறை உரிய தீர்வு காண வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: படிக்காமல் நண்பர்களுடன் சுற்றி வந்த 8ம் வகுப்பு மாணவன்.. பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு..
“யுமிஸ்” தளத்தில் முறையிடலாம்:
இதையடுத்து, தனியார் கல்லூரி மாணவ – மாணவியரில், ‘தமிழ் புதல்வன், புதுமைப் பெண்’ உட்பட இன்னும் பிற திட்டத்தில் பயன் பெற்று வருபவர்கள், அரசின் இலவச லேப்டாப் பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் உரிய தகுதி இருந்தும் சிலருக்கு லேப்டாப் கிடைக்காமல் போவதாக, உயர்கல்வித் துறை கவனத்திற்கு வந்துள்ளது. அந்த மாணவர்கள் https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் கல்லூரிகள் வாயிலாக முறையிடலாம். உரிய சரிபார்ப்புக்குப் பின் தகுதி இருப்பின் நிச்சயம் லேப்டாப் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் எவரும் விடப்பட மாட்டார்கள் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.